பொது மருத்துவம்

கண் பார்வைக்கு உதவும் உணவுகள்

Published On 2023-06-03 06:42 GMT   |   Update On 2023-06-03 06:42 GMT
  • கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போனை அதிக நேரம் பார்வையிடுவது கண் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
  • கண் பார்வையை மேம்படுத்துவதற்கும் சாப்பிட வேண்டிய உணவுகளின் பட்டியல் உங்கள் பார்வைக்கு...

எல்லாமே தொழில்நுட்பம் சார்ந்ததாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன், டேப்லெட், டி.வி. போன்ற சாதனங்களுடன் பல மணி நேரங்களை செலவிட வேண்டியுள்ளது. அப்படி அதிக நேரம் பார்வையிடுவது கண் ஆரோக்கியத்தை பாதிக்கும். தலைவலி, இரட்டை பார்வை, மங்கலான பார்வை, கண் எரிச்சல், கண் உலர் வடைதல், கண் சோர்வு போன்ற பாதிப்புகள் உண்டாகும். கண்களின் நலன் பேணுவதற்கும், கண் பார்வையை மேம்படுத்துவதற்கும் சாப்பிட வேண்டிய உணவுகளின் பட்டியல் உங்கள் பார்வைக்கு...

* நட்ஸ் வகைகளில் பாதாம் கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். பாதாமில் வைட்டமின் ஈ உள்ளது. பொதுவாக வைட்டமின் ஈ உள்ளடக்கிய உணவு பொருட்களை உட்கொள்வது கண்புரை மற்றும் மாகுலர் சிதைவைத் தடுக்க உதவும். பாதாமை எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம். சாலடுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். நட்ஸ் வகைகளுடன் கலந்தும் உட்கொள்ளலாம்.

* கேரட், கண் பார்வை திறனை அதிகரிக்கச்செய்யும் சக்தி கொண்டது. அதில் வைட்டமின் ஏ உடன் பீட்டா கரோட்டின்களும் அதிகம் நிரம்பப்பெற்றுள்ளன. வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் இவை இரண்டுமே கண் தொடர்பான ஆபத்துக்களை தவிர்க்க உதவும். கேரட்டை மாலை நேர சிற்றுண்டியாக உட்கொள்ளலாம். சாலட்டுகள், சூப்களாக தயாரித்தும் பருகலாம். உணவிலும் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

* பச்சை இலை காய்கறிகளில் லுடீன் மற்றும் ஜியாசாந்தின் உள்ளன. இவை இரண்டுமே ஆன்டி ஆக்சிடெண்டுகள் கொண்டவை. தெளிவான பார்வை திறனுக்கு வித்திடுபவை. மாகுலர் சிதைவை தடுக்கக்கூடியவை. பெர்ரி பழங்கள், குடை மிளகாய், சர்க்கரைவள்ளி கிழங்கு, அவகொடா, கீரை, ப்ரோக்கோலி, பட்டாணி போன்வைகளில் இந்த ஆன்டி ஆக்சிடெண்டுகள் ஏராளமாக உள்ளன. மேலும் வைட்டமின்கள் ஏ, சி, கே, போலேட், இரும்பு மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளன.

* ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி மற்றும் திராட்சைப்பழங்கள் போன்றவை கண்களுக்கு நன்மை பயக்கும் வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களுள் முக்கியமானவை. இந்த சிட்ரஸ் பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ளன. அவை ப்ரீ ரேடிக்கல் களால் ஏற்படும் சேதத்தில் இருந்து உடலைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், செல்கள் சேதம் அடையாமல் தடுப்பதற்கும், புதிய திசுக்களின் வளர்ச்சிக்கும் உதவும்.

* கண் பார்வையை மேம்படுத்த உணவில் சேர்க்க வேண்டிய சில சத்தான முழு தானியங்கள்: ஓட்ஸ், பார்லி. மேலும் டுனா, சால்மன், கானாங்கெளுத்தி, நெத்திலி, மத்தி மற்றும் ட்ரவுட் போன்ற மீன் வகைகளில் லீன் புரதங்கள் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை கண் களுக்கு நலம் சேர்ப்பவை.

* முட்டையும் கண் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவாகும். முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, லுடீன், ஜியா சாந்தின், துத்தநாகம் ஆகியவை காணப்படுகின்றன. அவை கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த வல்லவை. கண்ணில் இருக்கும் கார்னியா வைட்டமின் ஏ மூலம் பாதுகாக்கப்படுகிறது. கண்ணின் வெளிப்பகுதியில் அமைந்திருக்கும் கார்னியா, கண்புரை, மாகுலர் சிதைவு உள்ளிட்ட கண் நோய் அபாயத்தை குறைக்கின்றன. காலை, மதியம் மற்றும் இரவு உணவில் முட்டை சேர்த்துக்கொள்ளலாம்.

Tags:    

Similar News