சைனஸ் பிரச்சினைகளுக்கு உதவும் சித்தமருத்துவம்
- ஒவ்வாமை அழற்சி 'சைனஸிடிஸ்' நோயாக அறியப்படுகிறது.
- சைனசுக்கான ஆரம்பகால சிகிச்சைக்கு ஆன்டிபயோட்டிக் போதுமானது.
நம் முகத்துக்குள் இருக்கும் காற்றுப்பைகள் அல்லது அறைகளை 'சைனஸ்' என்று அழைக்கிறார்கள். இந்த சைனஸ் காற்றறைகள் தொற்றுக்கு உள்ளாகும்போது வரும் ஒவ்வாமை அழற்சி 'சைனஸிடிஸ்' நோயாக அறியப்படுகிறது.
சுற்றுச்சூழல் காரணத்தினாலோ, தொற்று நோய் அல்லது தனிப்பட்ட உடல் இயல்பினாலோ ஒவ்வாமை ஏற்படும்போது, காற்றறைகள் வீக்கம் அடைகின்றன. இந்த வீக்கத்தால் காற்றறையின் உள்சுவர் பாதிப்படைந்து எதிர்வினையாக ஒருவகை நீரைச் சுரக்க ஆரம்பிக்கிறது.
எதிர்ப்புச் சக்தி குறைவால், நாளடைவில் அந்த நீர் சளியாக மாறத் துவங்கும். இதன் காரணமாக தும்மல், தலைவலி, தலைபாரம் வரக்கூடும். இது தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் தூக்கமின்மையையும் சோர்வைவையும் உண்டாக்கும்... நாளடைவில் நுரையீரலில் பிரச்சினை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
சைனசுக்கான ஆரம்பகால சிகிச்சைக்கு ஆன்டிபயோட்டிக் போதுமானது. அதுவே தீவிரமடையும்போது கூடுதல் சிகிச்சைகள் அவசியமாகிறது.
சைனஸ் நோய்க்கான சித்தமருத்துவம்
சளி வந்தால் செய்ய வேண்டியவை:
* சளிக்கு ஆரம்பத்திலேயே துளசிச்சாறு 1 தேக்கரண்டி, தூதுவளைச்சாறு 1 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி கலந்து தினமும் மூன்று வேளை குடித்துவந்தால் சளி இரண்டொரு நாளில் குறையும். கப நோய்களுக்கு துளசிச்சாறு 100 மில்லி, ஆடாதோடைச்சாறு 100 மில்லி, வெற்றிலைச்சாறு 100 மில்லி, குப்பைமேனிச்சாறு 100 மில்லி எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி சித்தரத்தை, கண்டு பாரங்கி, ஜடாமாஞ்சில், சுக்கு, மிளகு, அக்ராகாரம், கோஷ்டம் இவைகள் ஒவ்வொன்றும் 5 கிராம் அளவு வாங்கி பொடியாக்கி ½ லிட்டர் நீர் ஊற்றி 100 மில்லி அளவு சுண்டக் காய்ச்சி மூலிகைச் சாறுகளுடன் கலந்து கொள்ள வேண்டும். 1 கிலோ சர்க்கரையை பாகு செய்து மூலிகைச்சாறும், கடைச்சரக்கு கசாயம் கலந்த கலவையை ஊற்றி பாகு கெட்டியாகி முறுகாமல் பதத்தில் (தேன் பதத்தில்) இறக்கி வைத்துக்கொண்டு, காலை, மாலை 10 மில்லி வீதம் கொடுத்துவர கபம் சம்பந்தமான நோய்கள் விலகும்.
சளியுடன் வரும் இருமலுக்கு:
* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் மூன்றும் சேர்ந்தது திரபலையாகும். இவைகளுடன் அதிமதுரம் சேர்த்து ஒவ்வொன்றும் 50 கிராம் எடுத்து உலர்த்திப் பொடி செய்து வைத்துக்கொண்டு வேளைக்கு ½ டீஸ்பூன் வீதம் காலை, மாலை உண்டுவர சளி இருமல் குணமாகும்.
* அதேபோல் சுக்கு, திப்பிலி, சிவதைவேர், கோஷ்டம், பேரரத்தை, கோரைக்கிழங்கு, அதிமதுரம், சித்தரத்தை இந்த எட்டுச்சரக்கிலும் 10 கிராம் வீதம் வாங்கிச் சூரணமாகச் செய்து வைத்துக்கொண்டு சம எடை சர்க்கரைக்கலந்து மூன்று வேளையும் வேளைக்கு 2 சிட்டிகை அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வர சளி, குத்திருமல் நிற்கும்.
சளியுடன் தும்மல் இருமலுக்கு மற்றும் மூக்கில் நீர் வடிதலுக்கு:
* திருநீற்றுப் பச்சிலைச் சாறு எடுத்து, 15 கிராம் மிளகு மூழ்கும்வரை விட்டு உலர்த்தி, அதை பொடி செய்து, நுண்ணிய பொடியாக சலித்து வைத்துக் கொண்டு சளி, தும்மல். இருமல் இருக்கும் போது மூக்குப்பொடிபோல் மூக்கில் விட்டு உறிஞ்ச குணமாகும்.
* தும்பை இலைச் சாற்றைக் கசக்கி மூக்கில் 2 சொட்டு விட்டாலும் கபம் சரியாகும். மூக்கில் நீர்வடிதல் மற்றும் தலைவலியும் குணமாகும். ஜாதிக்காயை குழம்பு போல் அரைத்து மூக்கின் மேல் பற்றுப் போட்டாலும் மூக்கில் நீர் வடிதல், தும்மல் குணமாகும்.
மூக்கில் ரத்தம் வடிதலுக்கு:
* தோல் சீவிய சுக்கு, மிளகு இரண்டிலும் ஒவ்வொன்றும் 100 கிராம் வீதம் வாங்கி கற்பூரம் 200 கிராமுடன் கலந்து புது சட்டியில் வைத்துக் கொளுத்திவிடவும். இவையாவும் எரிந்து சாம்பலாகிவிடும். இதை அரைத்து புட்டியில் வைத்துக் கொள்ளவும். தினம் ஒரு வேளை 1 சிட்டிகை அளவு தேனில் உட்கொள்ள தும்மல், இருமல், சுரம் குணமாகும்.
பல்வேறு காரணங்களால் மூக்கில் ரத்தம் வரும். அதற்கு நம்பகமான மூலிகை மருத்துவம், ஆடாதோடை சாறு ½ லிட்டர், மிளகு, சீரகம், ஓமம், சுக்கு, அதிமதுரம், சிற்றரத்தை ஒவ்வொன்றும் 25 கிராம் வீதம் பொடி செய்து, ஆடாதோடைச் சாற்றில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி பனைவெல்லம் ½ கிலோ கலந்து மீண்டும் காய்ச்சி குழம்பு பதம் வந்ததும் புட்டியில் பத்திரப்படுத்தவும். தினம் காலை, மாலை தேக்கரண்டி அளவு சாப்பிட மூக்கில் ரத்தம் வடிதல், ஷயரோகம் ஆகியவை குணமாகும்.
கோஷ்டம், வில்வவேர், திப்பிலி, திராட்சை இவைகள் யாவும் சம எடையாகப் பொடி செய்து நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி வைத்துக்கொண்டு தினம் இரண்டு மூக்கிலும் 5 துளி வீதம் விட்டுவர தும்மல் விலகும்.
மூக்கில் ரத்தக் குழாய் உடைந்து கொட்டும் ரத்தத்திற்கு:
* நெய்யில் நெல்லி வற்றலைப் பொடித்து அதைக் காடியில் அரைத்துப் பிழிந்து இரண்டு மூக்கிலும் இரண்டொரு சொட்டு விட நாசியில் வடியும் ரத்தம் நிற்கும்.
* படிகாரத்தைப் பொரித்து நீரில் கலந்து இரண்டொரு சொட்டு விட்டாலும் ரத்தம் வருவது நிற்கும்.
சைனஸ் என்ற பீனிச நோய்க்கு:
* சைனஸ்தான் மூக்கை வருத்தும் மிகக் கொடிய நோய் எனப் பார்த்தோம். அதற்கான எளிய நிவாரணம். குங்குமப்பூ, இஞ்சி, மிளகு, கோஷ்டம். அதிமதுரம் இவைகளைத் தேவையான அளவு எடுத்துப் பொடி செய்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி இரண்டொரு சொட்டு பீனிசம் உள்ள மூக்கில் விட்டு சிறிது உச்சந்தலையில் தேய்த்துவர நிவாரணம் கிடைக்கும்.
* அதேபோல் வட்டத்திருப்பி, மஞ்சள், மரமஞ்சள், மருள், கிழங்கு, திப்பிலி, ஜாதி மல்லிகைக் கொழுந்து இவைகளை, சிறிது எடுத்து நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி வடித்து நசியமிட பீனிச நோய் சாந்தப்படும்.
* கிராம்பு, வில்வக்காய், திப்பிலி, கோஷ்டம், திராட்சை, சுக்கு இவைகள் ஒவ்வொன்றும் 10 கிராம் வீதம் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து ¼ லிட்டர் பசுநெய்யில் கலந்து, காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு தினமும் காலை , இரவு இரண்டு வேளையும் 5 துளி வீதம் மூக்கில் விட பீனிசம், அதனால் வரும் தும்மல் ஆகியவை போகும்.
* தோல் நீக்கிய சுக்கு, வறுத்த மிளகு, அக்கராகாரம், கோஷ்டம். கண்டங்கத்திரிவேர், ஆடாதோடை வேர், மூக்கிரட்டைவேர். கொடிவேலி வேர், நன்னாரி வேர், அதிமதுரம் ஆகியவைகள் ஒவ்வொன்றும் 5 கிராம் வீதம் நன்றாக இடித்து சலித்துச் சூரணமாகச் செய்து வைத்துக்கொண்டு காலை, மாலை வேளைக்கு ½ டீஸ்பூன் வீதம் பாலில் கலந்து உண்டுவர பீனிசம், தலைவலி ஆகியவை குணமாகிவிடும்.