null
சுக்கை மருந்தாகப் பயன்படுத்துவது எப்படி?
- சுக்கை நீரிட்டுக் குழைத்து நெற்றிக்கு பற்றிட தலைவலி தணியும்.
- சுக்குப் பொடியோடு பூண்டுச்சாறு சேர்த்து சாப்பிட கொடுமையான வயிற்றுநோய் குணமாகும்.
நாம் அடிக்கடி பயன்படுத்துகிற சுக்கு மருத்துவ குணங்கள் நிறைந்தது. இந்த சுக்கு எத்தனை மருத்துவ குணங்களை தனக்குள் பொதிந்து வைத்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
சுக்கிலுள்ள 'ஜிஞ்சிரால்', 'ஷோகோல்' ஆகிய வேதிப்பொருட்கள் லேசான மயக்கம் தருவதாகவும், வீக்கத்தைக் கரைக்கக் கூடியதாகவும், காய்ச்சலைத் தணிக்கக் கூடியதாகவும், வலி நிவாரணியாகவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லதாகவும், ஈரலை பாதுகாக்கக் கூடியதாகவும் இருப்பதால் சுக்கு உணவிலும் மருந்திலும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாவண்ணம் பாதுகாக்கும் மருத்துவ குணங்களும் சுக்குக்கு உண்டு. சுக்கிலுள்ள மருத்துவ வேதிப்பொருட்கள் ரத்த வட்ட அணுக்களின் சேர்க்கையைக் குறைத்து ஒற்றைத் தலைவலியை தடுத்து நிறுத்தக்கூடியதாக அமைகிறது.
சுக்கின் மீது சுண்ணாம்புக் களிம்பை நன்றாகப் பூசி வெயிலில் உலரவிட்டு உலர்ந்ததும், மேல் தோலைச் சுரண்டி நீக்கிவிட்டே பயன்படுத்த வேண்டும்.
மதிய உணவோடு எவ்வகையிலேனும் சுக்கை சேர்த்துக் கொள்வதால் வாயுக் கோளாறுகள் விலகி ஆரோக்கியத்துக்கு அடி கோலுகின்றது.
இன்றைக்கும் அரிசி மாவு, வெல்லப்பாகு ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் 'அதிரசம்' எனும் தின்பண்டத்தில் சிறிது சுக்குப்பொடி சேர்ப்பர். சுவையான அதிரசம் சற்று அதிகமாகச் சாப்பிட்டாலும் சுகம் கெடாவண்ணம் சுக்கு சேர்க்கப்படுவது மட்டுமின்றி உணவில் மருந்தாகவும் அது செயல்படுகிறது என்பதுதான் உண்மை.
உடலில் பித்த மேலீட்டால் குமட்டல், வாந்தி, தலைசுற்றல் ஏற்படும் போது சுக்குத் தூளை வெருகடி (சுட்டு விரல், நடு விரல், கட்ைட விரல் ஆகியவற்றைச் சேர்த்து எடுக்கும் அளவு) அளவு எடுத்துத் தேன் சேர்த்துக் குழைத்துச் சாப்பிட விரைவில் குணம் ஏற்படும்.
சுக்கை நீரிட்டுக் குழைத்து நெற்றிக்கு பற்றிட தலைவலி தணியும். இதையே தொண்டை மீது பூசினால் தொண்டைக் கர கரப்பு, ெதாண்டைக்கட்டு, வலி ஆகியன குறைந்து விடும். சுக்குக் களிம்பை நெற்றிப் புருவங்களின் மேல் பூசி வைக்க கிட்டப் பார்வைக் கோளாறு குணமாகும்.
வெருகடி சுக்குப்பொடியை போதிய வெல்லம் சேர்த்து நீரிலிட்டு காபி போல காய்ச்சி வடிகட்டி பால் சேர்த்துக் குடித்துவர அஜீரணம் அகலும். அதிசாரம் என்கிற நீர்க்கழிச்சல் அடங்கும். சுக்குத்தூள் வெருகடி அளவு எடுத்து போதிய அளவு பசு நெய்யும் வெல்லமும் சேர்த்துக் குழைத்து அந்தி, சந்தி என இருவேளை சாப்பிட்டுவர நெஞ்சகச் சளி கரையும். இருமல் குணமாகும். சுக்குத் தூளோடு எலுமிச்சைச்சாறு இரண்டு பங்கும் சோற்றுப்பு சிறிதளவும் சேர்த்து உள்ளுக்கு சாப்பிட வயிற்று உப்புசம், மந்தம் ஆகியன போகும்.
சுக்குத் தூளோடு சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதால் சாதாரண வயிற்று வலியும், விட்டுவிட்டு கடுக்கும் வயிற்று வலியும் உடனே குணமாகும். பத்து கிராம் சுக்குத்தூளோடு 5 மி.லி. விளக்கெண்ணெய் சேர்த்துக் கொதிக்க வைத்து தினம் இரவு படுக்கப்போகும் முன் ஒரு மண்டலம் உண்டுவர மூட்டுவலிகள், மூட்டு வீக்கம் ஆகியன குணமாகும்.
வெருகடி அளவு சுக்குப் பொடியோடு சிறிது தேனும் எலுமிச்சைச்சாறும் சேர்த்துக் குழைத்து அன்றாடம் காலையில் உண்டுவர உடல் பலம் பெறும். மேலும் இதுவே உடல் வியர்வையைப் பெருக்கிக் காய்ச்சலைத் தணிப்பதற்கும் உடல் அழகு கூடுவதற்கும் பயன்தரும்.
சுக்குப் பொடியோடு பூண்டுச்சாறு சேர்த்து சாப்பிட கொடுமையான வயிற்றுநோய் குணமாகும். சுக்குத் துண்டை பல்வலி வந்தபோது வாயிலிட்டு அடக்கி வைத்திருக்க பல் வலி தணியும். சுக்குத் தூளோடு பத்துப் பதினைந்து துளசி இலைகளைச் சேர்த்துக் கொதிக்க வைத்து சுவைக்காகத் தேன் சேர்த்துக் குடித்துவர ஆஸ்துமா குணமாகும். சுக்குப் பொடியோடு ஐந்தாறு பூண்டுப் பற்கள் சேர்த்துக் கொதிக்க வைத்து அதனின்று வரும் ஆவியை சுவாசிப்பதால் ஆஸ்துமா நோயின் வேதனை தணியும்.
சுக்குப்பொடி வெருகடி அளவோடு துளசிச்சாறு ஒரு தேக்கரண்டியும் வெற்றிலைச்சாறு ஒரு தேக்கரண்டியும் சேர்த்துக் குழைத்து சாப்பிட்டுவர வறட்டு இருமல், நெஞ்சுச் சளியோடு கூடிய இருமல் ஆகியன அனைத்தும் விலகிப் போகும். மஞ்சள் காமாலை வந்தபோது வெருகடி அளவு சுக்குத் தூளோடு புதிதாகப் பிழிந்த எலுமிச்சைச்சாறு ஒரு தேக்கரண்டி, புதினா சாறு ஒரு தேக்கரண்டி, சிறிது தேன் சேர்த்து சாப்பிட்டு வர ஈரல் பலம் பெறுவதோடு மஞ்சள் காமாலையும் குணமாகும்.
சுக்குத்தூளோடு சம அளவு புதினா சாறும் சிறிதளவு உப்பும் சேர்த்து சாப்பிட்டு வர கக்குவான் இருமல் குணமாகும்.
சுக்குத் தீநீரை இரவு படுக்கப் போகுமுன் அன்றாடம் குடித்துவர வாத நோய்களை தடுக்கும். உதறுவாதம், முகவாதம், பாரிசவாதம், பக்கவாதம் எனப்படுகின்ற அனைத்து வாதக் கோளாறுகளும் விலகிப் போகும்.
"சுக்கு வாந்தியை நிறுத்தக் கூடியது... வாயுவைத் தணிக்கக் கூடியது... கொழுப்புச் சத்தைக் குறைக்கக்கூடியது... வீக்கத் தைக் கரைக்கக் கூடியது... கடுப்பை நீக்கக் கூடியது... நெஞ்சகச் சளியைக் கரைத்து வெளியேற்றவல்லது... ரத்த ஓட்டத்தைத் தூண்டக்கூடியது."