பொது மருத்துவம்

மன அழுத்தம் நீங்கி மகிழ்ச்சி அளிக்க உதவும் உணவுகள், பழக்கவழக்கங்கள்!

Published On 2024-07-22 04:26 GMT   |   Update On 2024-07-22 04:26 GMT
  • டோபமைன் நமது மனநிலையை உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.
  • நன்றி சொல்லும் போது டோபமைனை மூளை அதிக அளவில் வெளியிடுகிறது.

டோபமைன் என்பது மூளையில் உற்பத்தியாகும் ஒரு ரசாயனம். இது நமது மனநிலையை உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. இது உடல் இயக்கம், நினைவாற்றல், மகிழ்ச்சிகரமான மனநிலை, ஊக்கம், நடத்தை, அறிவாற்றல், தூக்கம், உற்சாகம் மற்றும் கற்றல் ஆகிய மனநிலைகளுக்கு உதவுகிறது.

ஒருவருக்கு டோபமைன் அளவு குறைவாக இருந்தால் அவர் சோர்வாக, ஊக்கமில்லாத மனதுடன், மகிழ்ச்சியற்றவராக, மனம் உறுதியான முடிவெடுக்கும் தன்மை இல்லாதவராக இருப்பார். தூக்கமின்மை பிரச்சனைகளும் இருக்கும்.

உடலில் இயற்கையாக டோபமைனை அதிகரிக்கும் உணவு முறைகள்:

1) டோபமைனை உருவாக்க நமது உடலுக்கு டைரோசின் என்கிற அமிலோ அமிலம் தேவைப்படுகிறது. அது பாலாடைக்கட்டி, மீன், இறைச்சி, தானியங்கள், பால், பீன்ஸ், சோயா போன்றவற்றில் அதிகம் உள்ளது. மேலும் காபின் அதிகம் உள்ள காபி மற்றும் சாக்லேட் போன்றவை டோபமைன் சுரப்பை அதிகரிக்கும்.

பாதாம், வால்நட், ஆப்பிள், வெண்ணெய், அவகோடா, வாழைப்பழம், சாக்லேட், பச்சை இலைக் காய்கறிகள், பச்சை தேயிலை, பீன்ஸ், ஓட்ஸ், ஆரஞ்சு, பட்டாணி, எள் மற்றும் பூசணி விதைகள், தக்காளி, மஞ்சள், தர்பூசணி மற்றும் கோதுமை ஆகியவை டோபமைனை அதிகரிக்கும் உணவுகள் ஆகும்.

2) ஒரு இலக்கை நிர்ணயித்து அதற்காக உழைத்து அதில் வெற்றி காணும்போது நமது உடல் அதிக டோபமைனை வெளியிடுகிறது. புதிய விஷயங்களை ஆர்வமாகக் கற்றுக்கொள்ளும் போதும் டோபமைன் அதிகரிக்கிறது.

3) மிதமான சூரிய ஒளியில் 20 நிமிடம் தினமும் செலவிடும்போது டோபமைன் சுரப்பு அதிகரிக்கிறது.

4) ஆழ்ந்த சுவாசம், பிரணாயாமம், மூச்சுப் பயிற்சி இவை டோபமைன் அளவை அதிகரிக்கும். மூச்சை உள்ளிழுத்து சிறிது நேரம் வைத்து, பின்பு அதை வெளியே விடவும். உடனடியாக டோபமைன் அளவு அதிகரிப்பதைப் பார்க்கலாம்.

5) தியானம், உடற்பயிற்சி, யோகா, மசாஜ், நடப்பது, புத்தகம் படிப்பது போன்றவை டோபமைன் அளவை அதிகரிக்க உதவுகிறது.

6) சக மனிதர்களுக்கும், கடவுளுக்கும் நன்றி சொல்லும் போது டோபமைனை மூளை அதிக அளவில் வெளியிடுகிறது. எனவே, சிறிய அளவு நன்மை கிடைத்தாலும் அதற்காக நன்றி சொல்வது உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

சித்த மருத்துவம்:

1) நெல்லிக்காய் லேகியம்: காலை 5 கிராம், இரவு 5 கிராம் வீதம் உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.

2) அசுவகந்தா லேகியம்: காலை, இரவு ஐந்து கிராம் வீதம் உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்

3) பிரம்மி மாத்திரை: காலை, இரவு ஒரு மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும்.

4) வல்லாரை மாத்திரை: காலை, இரவு ஒரு மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும்.

Tags:    

Similar News