காய்ச்சல் வந்தால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்!
- ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கும்.
- உடலின் பழுதுபார்க்கும் செயல்முறைகளையும் ஊக்குவிக்கும்.
காய்ச்சல் வந்தால் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு அசவுகரியம், மந்தம், பலவீனம் போன்றவை ஏற்பட்டு அன்றாட செயல்பாடுகள் முடங்கிப்போய்விடும். அப்படி அடிக்கடி காய்ச்சல் வருவதோ, ஒருசில நாட்களை கடந்தும் நீடிப்பதோ ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
ஆனால் எப்போதாவது திடீரென்று காய்ச்சல் வந்தால் அது உடல் நலனுக்கு நன்மை செய்யும். உடலின் பாதுகாப்புக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது காய்ச்சலின்போது உடலின் வெப்பநிலை 99.1 டிகிரி பாரன்ஹீட் முதல் 102 டிகிரி பாரன்ஹீட் வரைக்குள் இருந்தால் சில ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். அவை பற்றி தெரிந்து கொள்வோம்.
ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்
காய்ச்சலின் போது, உடலில் ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கும். இந்த செல்கள்தான் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முன்னணி வீரர்கள்போல் செயல்படும். பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க்கிருமிகளை கண்டறிந்து அவற்றின் மீது தாக்குதல் தொடுப்பது இவற்றின் பணியாகும்.
காய்ச்சலின்போது உடல் வெப்பநிலை அதிகரிப்பது, எலும்பு மஜ்ஜையில் அதிக ரத்த வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்யத் தூண்டும் என்பது ஆய்விலும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த செயல்முறையின்போது நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடுவதற்கு உடலின் செயல்திறன் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு அமைப்பு பலப்படுத்தப்பட்டு நோயின் தீவிரத்தையும் குறைக்கும்.
பாக்டீரியா - வைரஸ் வளர்ச்சி குறையும்
பாக்டீரியா மற்றும் வைரஸ்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தி அவை குறைவான அளவுக்கு வளர்வதற்கு சாதகமான சூழலை காய்ச்சல் உருவாக்கும். நமது உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் (98.6 டிகிரி பாரன்ஹீட்). இந்த வெப்பநிலையை பல நோய்க்கிருமிகள், நுண்ணுயிரிகள் விரும்புகின்றன.
காய்ச்சல் காரணமாக உடலின் வெப்பநிலை உயரும்போது இவற்றின் செயல்பாடுகள் முடங்கும். அதிக உடல் வெப்பநிலை, இன்புளூயன்ஸா வைரஸ் போன்ற சில வைரஸ்களின் வளர்ச்சியையும், செயல்பாடுகளையும் தடுக்கும். அவற்றின் வளர்ச்சியை குறைப்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலமாக்கும். நோய்த்தொற்றுகளை அழிப்பதற்கு அதிக நேரத்தையும் அளிக்கும்.
வைரஸ் எதிர்ப்பு செயல்பாட்டில் முன்னேற்றம்
காய்ச்சலினால் ஏற்படும் அதிக உடல் வெப்பநிலை நோய்க்கிருமிகளை குறைப்பதோடு, சில நோய் எதிர்ப்பு உயிரணுக்களின் செயல்பாட்டையும் மேம்படுத்தும். சைட்டோகைன்கள் எனப்படும் புரதங்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். இவை உடலில் உள்ள ஆன்டிவைரல் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு மூலக்கூறுகளின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும்.
மேலும் காய்ச்சல் ஏற்படுத்தும் வெப்பநிலை நியூட்ரோபில்ஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு உயிரணுக்களின் செயல்திறனை மேம்படுத்தும். அவை நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடுவதற்கு முக்கியமானவை.
பழுதுபார்க்கும் செயல்முறையை மேம்படுத்தும்
காய்ச்சல் உடலின் பழுதுபார்க்கும் செயல்முறைகளையும் ஊக்குவிக்கும். அதிக வெப்பநிலை சேதமடைந்த புரதங்களை சரிசெய்ய உதவும். செல்களை அழுத்தத்தில் இருந்தும் பாதுகாக்கும்.
இந்த புரதங்கள் செல்களை பராமரிப்பதிலும், அவற்றை மீட்டெடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிக வெப்பநிலை புரதங்களின் உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் காய்ச்சல் அல்லது வீக்கத்தால் சேதமடைந்த செல்கள் சரிசெய்யப்படுவதற்கு வழிவகை செய்யும்.
நச்சுக்களை நீக்கும்
காய்ச்சலின் போது உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கும். நச்சுத்தன்மை நீங்குவதற்கான செயல்முறைக்கும் உதவும். குறிப்பாக வளர்சிதை மாற்ற விகிதங்கள் அதிகரிப்பது வியர்வை மற்றும் நச்சுக்களின் வெளியேற்றத்திற்கு வழிவகுக்கும்.
வியர்வை உடலில் இருந்து சில நச்சுக்களை அகற்ற உதவும் என்பதை ஆய்வுகளும் கூறுகின்றன. எனவே, காய்ச்சலால் தூண்டப்பட்ட வியர்வை தீங்கு விளைவிக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கும்.
நோய் எதிர்ப்பு திறன் கூடும்
காய்ச்சல் உடலின் நோய் எதிர்ப்பு நினைவகத்தை மேம்படுத்தும். நோய்க்கிருமிகளுக்கு எதிராக நீண்டகால பாதுகாப்பிற்கு இது முக்கியமானது. அதிக வெப்பநிலை டி செல்கள் மற்றும் பி செல்கள் போன்ற நோய் எதிர்ப்பு நினைவக செல்களை உருவாக்குவதை மேம்படுத்தும். உண்மையில் காய்ச்சலை அனுபவிப்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தை எதிர்கால நோய் தொற்றுகளுக்கு எதிராக பாதுகாக்க வழிவகை செய்யும்.