பொது மருத்துவம்

கோடை காலத்தில் ஏற்படும் கண் நோய்களை தடுப்பது எப்படி?

Published On 2024-04-07 10:00 GMT   |   Update On 2024-04-07 10:00 GMT
  • மற்ற சமயங்களை விட கோடை காலத்தில் கண் நோய் அதிகமாக பரவக்கூடும்.
  • மெட்ராஸ் ஐ மற்றும் அலர்ஜி காரணமாக கண்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

 கோடை காலங்களில் சுட்டெரிக்கும் சூரிய கதிர்வீச்சுகளால் உமிழப்படும் வெப்பம் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கும் வித்திடும். அவற்றுள் கண் நோய்களும் ஒன்று. மற்ற சமயங்களை விட கோடை காலத்தில் கண் நோய் அதிகமாக பரவக்கூடும்.

இந்த கண் நோய் எதனால் ஏற்படுகிறது? எத்தகைய பாதிப்புகளை உண்டாக்கும்? கண் நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? அதில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? பாதிப்பு ஏற்பட்டால் நோய் பாதிப்பில் இருந்து விடுபடுவது எப்படி? கண் நோய்களை தடுக்கும் உணவு முறைகள், சுகாதார நடைமுறைகள் என்னென்ன?

 கண் சிவத்தல்

''கோடை காலத்தில் மெட்ராஸ் ஐ மற்றும் அலர்ஜி காரணமாக கண்களுக்கு பாதிப்பு ஏற்படும். சூரியனில் இருந்து புற ஊதாக்கதிர்கள் அதிகமாக வெளிப்படுவது, சுற்றுச்சூழல் மாறுபாடும், மாசுபாடும் ஒத்துக்கொள்ளாதது, பூக்களில் இருந்து வெளிப்படும் நுண் மகரந்த துகள்கள் காற்றில் கலந்து கண்களுக்குள் விழுவது போன்ற காரணங்களால் அலர்ஜி சார்ந்த கண் நோய் ஏற்படும். கண்களில் அரிப்பு, எரிச்சல், கண் சிவத்தல், கண் வீக்கம் போன்ற அறிகுறிகள் வெளிப்படும். கண்களில் இருந்து நீர் வடியும்.

அதில் வைரஸ், பாக்டீரியா கிருமிகள் கலந்திருக்கும். அப்போது கண்களை கைகளால் துடைத்தால் அந்த கிருமிகள் கைகளில் படிந்துவிடும். அதன் மூலம் மற்றவர்களுக்கு பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கிருமியின் தன்மையை பொறுத்து நோயின் வீரியம் அமைந்திருக்கும். பாக்டீரியா கிருமிகள் என்றால் சொட்டு மருந்து போன்ற முறையான சிகிச்சை மூலம் ஓரிரு நாட்களில் குணப்படுத்தி விடலாம். வைரஸ் கிருமியாக இருந்தால் இரண்டு வாரங்களாகும். மருத்துவரின் ஆலோசனைப்படி முறையான சிகிச்சை முறைகளை பின்பற்றினால் போதும்.

கண்களை பார்ப்பதால் பரவாது

மெட்ராஸ் ஐ அல்லது அலர்ஜியால் கண் நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாகுபவர்களின் கண்களை பார்ப்பதால் மற்றவர்களுக்கு பரவாது. கைகள் மூலம்தான் மற்றவர்களுக்கு பரவும் என்பதால் சானிடைசர் பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். கண்களை தொடக்கூடாது. கண்ணாடி அணிவதன் மூலம் கண்களை தொடுவதை தவிர்க்க முடியும்.

சிலருக்கு கோடை காலம் தொடங்கிவிட்டாலே கண் அரிப்பு, கண் சிவத்தல், கண் எரிச்சல் போன்ற அறிகுறிகள் எட்டிப்பார்க்கும். இத்தகைய அலர்ஜி வராமல் தடுக்க சன் கிளாஸ் அணிய வேண்டும். குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் சன் கிளாஸ் அணிய வேண்டும். ஏனெனில் கண்புரை, விழித்திரையில் பார்வை இழப்பு ஏற்படுவதற்கு சூரிய கதிரில் வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள்தான் காரணம்.

சன் கிளாஸ் அணிவதன் மூலம் அத்தகைய பாதிப்புகளை தடுக்கலாம். கண்ணாடி அணிபவர்கள் கோடை காலங்களில் மட்டுமாவது 'பவர் சன் கூலிங் கிளாஸ்' அணியலாம். 'போட்டோ குரோமோடிக் சன் கிளாஸ்' அணிவதும் நல்லது.

ஜில் ஒத்தடம்

சளி, இருமல் காரணமாக தொண்டையில் வலி ஏற்படும். அப்போது தொண்டையில் சேரும் சளி மூலமும் சிலருக்கு கண் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உண்டு. கண்களில் அரிப்பு, எரிச்சல், நீர் வடிதல், கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும். 'ஜில் ஒத்தடம்' கொடுப்பதன் மூலம் அலர்ஜியை தடுக்கலாம். ஐஸ் கட்டி அல்லது குளிர்ந்த நீரை துணியில் நனைத்து கண்களை சுற்றியுள்ள பகுதியில் 5 முதல் 10 விநாடிகள் வரை காலை, மாலை இருவேளை ஒத்தடம் கொடுக்கலாம். அப்படியும் அலர்ஜி குறையவில்லை என்றால் கண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

 கண் கட்டி

கோடை காலத்தில் சிலருக்கு கண் மீது கட்டி உருவாகும். வெயிலில் வியர்க்கும்போது உடலில் எண்ணெய் சுரப்பு அதிகமாகும். இமை முடி அருகிலும் எண்ணெய் கசியும். அது வெளியே வராமல் உள்ளேயே தேங்கும்போது கண்களில் கட்டி உருவாகிவிடும். மாத்திரை, ஆயில்மெண்ட் மூலம் சரி செய்துவிடலாம். சுடு நீரை துணியில் நனைத்து வெதுவெதுப்பாக ஒத்தடம் கொடுப்பதும் பலன் தரும். நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பிரச்சினை வருவதற்கான வாய்ப்பு அதிகம். காட்டன் பட்ஸ், பேபி ஷாம்பு கொண்டு கண் இமை பகுதிகளை சுத்தம் செய்வதன் மூலமும் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்.

 அழுத்தம் கொடுக்கக்கூடாது

குழந்தைகள் சாக்லெட், மிட்டாய் சாப்பிட்டுவிட்டு கைகளை முறையாக கழுவவில்லை என்றாலும் நோய்த்தொற்று உண்டாகும். வெளியே சென்று விளையாடும்போது மலர்களில் உள்ள நுண் துகள்கள் காற்றில் கலந்து கண்களில் விழும்போது கண் எரிச்சல், கண் வலி, கண் சிவத்தல், நீர் வடிதல், கண் கூசுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அந்த சமயத்தில் கண்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் தண்ணீரில் கழுவ வேண்டும். அதன் பிறகும் வலி இருந்தால் கண் மருத்துவரை அணுக வேண்டும்.

ஆரோக்கியம் காக்கும் உணவுகள்

கண் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும், கண் நோய்கள் வராமல் தடுப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் காய்கறிகள், பழங்கள், உணவுப்பொருட்களை உட்கொண்டாலே போதுமானது. கூடுமானவரை வீட்டு உணவுகளை உட்கொள்ள வேண்டும். பஜ்ஜி, போண்டா போன்றவற்றில் கலர் பொடி சேர்த்து சாப்பிடுவதால் சிலருக்கு கண் அலர்ஜி வரக்கூடும்.

குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். மஞ்சள், ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் பப்பாளி, கேரட், மாம்பழம் உள்பட எல்லா வகையான காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது. அவற்றில் இருக்கும் பீட்டா கரோட்டின் கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். கைகளையும், முகத்தையும் அடிக்கடி கழுவி தூய்மையாக வைத்திருப்பதன் மூலமே நோய்த்தொற்று வராமல் தடுத்துவிடலாம்.

Tags:    

Similar News