பொது மருத்துவம்
null

மன அழுத்தத்தினால் மனநலம் பாதிக்கப்படும்

Published On 2023-10-31 08:11 GMT   |   Update On 2023-11-02 06:32 GMT
  • உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
  • தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதற்கும் மன அழுத்தம் காரணமாகிறது.

உலக நாடுகளை ஒப்பிடுகையில் மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவில் வேலை பார்ப்போர் விகிதம் 39.1 சதவீதமாகவே இருக்கிறது. பொருளாதார நிலையை சமாளிக்க தகுதியான வேலை கிடைக்காவிட்டாலும் கிடைத்த வேலையை ஏற்றுக்கொண்டு செய்யும் பலரை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

வேலை கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கும் நிலையில் ஏதோ ஒரு வேலை கிடைத்து அங்கு பணிச்சூழல் சரியாக அமையவில்லை என்றால் அங்கே மனரீதியான பிரச்சினைகள் ஏற்படுகிறது. நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கும், பணியாளர்களின் செயல்திறனுக்கும் இடையே காணப்படும் இடைவெளிதான் இந்த மாதிரியான சூழ்நிலையை உருவாக்குகிறது. இதனால் வேலை, ஊதியம் தாண்டி மன அமைதியுடன் வேலை செய்வதற்கான ஒரு நல்ல சூழ்நிலை எல்லோருக்கும் தேவைப்படுகிறது.

வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் மன அழுத்தம் தவிர்க்க முடியாது. ஒரு நிறுவனத்தில் ஒருவருக்கு கீழ் வேலை செய்யும் போது நாம் எதிர்பார்க்கும் அனைத்தும் கிடைத்துவிடுவதில்லை. குடும்பச்சூழல், வேலைப்பளு, கட்டமைப்பு வசதிகள், அலுவலக சூழ்நிலை, சகபணியாளர்கள் நடந்துகொள்ளும் விதம், மேல் அதிகாரியின் நடவடிக்கை, நேரமின்மை, வேலையில் தெரியாமல் செய்யும் தவறுகள் என அலுவலகத்தில் மன அழுத்தம் ஏற்பட பலவித காரணங்கள் உள்ளன.

இவை எல்லாம் எப்போதாவது ஏற்பட்டால் பெரிதாக கண்டுகொள்ளத்தேவை இல்லை. ஆனால் அனைத்து சூழ்நிலைகளும் உங்களுக்கு எதிராக திரும்பும் போது உடனடியாக தீர்வுகாண வேண்டியது அவசியம்.

கண்டிப்பாக எல்லோருக்கும் வேலைப்பளுவின் காரணமாக மன அழுத்தம் இருக்கிறது. சிலபேர் மட்டும் தான் இதற்கு முக்கியத்துவம் அளித்து மனதிற்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் தான் அவர்களுக்கும் உடம்பும், மனதும் மிகவும் பலவீனம் அடைகிறது.

உங்களுக்கு வேலை கடினமாக உள்ளது, அதை கையாள்வதற்கு மிகவும் சிரமப்படும்போது வேலைபார்க்கும் இடத்திலேயே உதவிசெய்வதற்கு உங்கள் நண்பரையோ அல்லது மேலதிகாரியின் உதவியையோ நாடலாம். ஏனென்றால் அவர்கள் அதை எல்லாம் கடந்துதானே வந்திருப்பார்கள். உங்களுடைய தேவைகளை அவர்களிடம் கேட்டுப்பெறலாம்.

இங்கு வேலை என்பது மிகவும் முக்கியமானது. இந்த வேலை கடினமாக இருக்கிறது என்று எண்ணினால் இதைவிடுத்து வேறு இடத்திற்கு போனாலும் அங்கும் வேலைப்பளு இருக்கத்தான் செய்யும். எனவே அதனை கையாள தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.

முதலில் உங்களது மனநிலை எதுவாக இருந்தாலும் அதனை உங்களால் கையாள முடியுமா? இல்லையா என்று பார்க்க வேண்டும். உங்களால் முடியவில்லை என்றால் நீங்கள் மருத்துவ ஆலோசகரை அணுகலாம். இப்போது நிறைய தெரப்பிஸ்டுகள் இருக்கிறார்கள். தற்போது நிறைய அட்வான்ஸ் டெக்னாலஜிகளும் வந்துவிட்டன.

இதையும் மீறி உங்களுக்கு மன அழுத்தம் இருந்துகொண்டு இருந்தால், அதாவது மருத்துவ ஆலோசகரை அணுகியும் உங்களுக்கு சரியாகவில்லை என்றால் அப்போது அந்த வேலையை மாற்றுவதை பற்றி நீங்கள் சிந்திக்கலாம். உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறதோ, நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அந்த வேலைக்கு உங்களை மாற்றிக்கொள்ளலாம்.

உயர் பதவிகளில் இருப்பவர்கள் இந்த வகை மன அழுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஏனெனில் வேலைப்பளு என்பது அவர்களுக்கு இருந்துகொண்டுதான் இருக்கும். மேலும் அவர்களால் வேலையைவிட்டு அவ்வளவு எளிதில் வெளியே வர முடியாது. அவர்கள் மன அழுத்தம் வேலைகளால் ஏற்படுகிறதா அல்லது வீட்டு சூழ்நிலைகளால் ஏற்படுகிறதா என்பதை பிரித்து பார்க்க வேண்டும்.

மன அழுத்தத்தால் ஏற்படும் பிரச்சினைகள் மனநல பிரச்சினைகளையும், உடல்நல பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். மன அழுத்தம் அதிகமாக இருந்தால் பக்கவாதம், மாரடைப்பு, உடல்பருமன், எடைகுறைவு என பல உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

மனநல பிரச்சினை உள்ளவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம். தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதற்கும் மன அழுத்தம் காரணமாகிறது.

வேலைப்பளுவினால் மன அழுத்தம் ஏற்பட்டால் அது உங்களது வேலையை பாதிக்கிறது, உங்களது கவனத்தை வேலைகளில் செலுத்த இயலல்லை. அதற்கு மாறாக உங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் தான் அதிகம் வருகிறது என்றால் உடனடியாக மருத்துவ ஆலோசகரை சந்திப்பது தான் மிகவும் நல்லது.

மருத்துவரை பார்ப்பதற்கோ அல்லது கவுன்ஸ்லிங் போவதற்கோ முதலில் அச்சப்படக்கூடாது. நம்மை பற்றி எப்படி பேசுவது, எல்லோருக்கும் தெரிந்துவிடுமோ, நம்மை பற்றி இவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணாமல் எல்லா தடைகளையும் உடைத்துவிட்டு துணிந்து மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும். அவர்களை சந்தித்து ஆலோசனைகளை பெற்றாலே உங்களுடைய வாழ்வியல் முறைகள் மாறிவிடும்.

தற்கொலை எண்ணங்கள் ஏன் ஏற்படுகிறது

தற்கொலை எண்ணங்கள் ஒரு மனிதன் கோபமாக இருக்கும்போது அல்லது சண்டையிடும் போது இந்த மாதிரி எண்ணங்கள் வருவது என்பது இயற்கை. ஆனாலும் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. கோபத்தை கட்டுப்படுத்த முடியாத போது தான் விபரீதமான எண்ணங்களும், தற்கொலை முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. இதனால் நிறைய தற்கொலைகளும் நடந்துள்ளன.

ஒருவருக்கு தொடர்ந்து தற்கொலை எண்ணங்கள் வருவது, தற்கொலை பற்றி அதிகமாக பேசுவது, தனிமையில் இருப்பது ஆகிய அறிகுறிகள் இருப்பவர்களை கண்டிப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும். தற்போது ஹெல்ப்லைன் மூலமாக கூட மருத்துவ ஆலோசனைகள் அளிக்கப்படுகிறது. எனவே மருத்துவமனைக்கு செல்லாமல் இந்த மாதிரி ஹெல்ப்லைன் மூலமாக மருத்துவ ஆலோசகருக்கு போன் செய்தும் கவுன்ஸ்லிங் அளிக்கலாம்.

மன அழுத்தத்திற்கான சிகிச்சை முறைகள்

பலவருடங்களுக்கு முன்னால் இருந்தே மன அழுத்தத்திற்கு நிறைய சிகிச்சைகள் இருக்கின்றன. அதிக மனக்குழப்பம் இருப்பவர்களுக்கு கூட இப்போது நல்ல சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அதில் மிகவும் முக்கியமானது யோகா மற்றும் தியானம். இது மன அழுத்தத்தில் இருந்து விடுபட மிகவும் உதவுவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இந்த சிகிச்சை முறைகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டு வந்தால் மட்டுமே நல்ல பலனை பெறமுடியும்.

தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்வது, மருத்துவ ஆலோசகரின் வழிமுறைகளை பின்பற்றுவது. தொடர் சிகிச்சை முறைகளை பின்பற்றுவது என்று செய்தால் மட்டுமே சீக்கிரமாக இத்தகைய நிலையில் இருந்து வெளியே வர முடியும்.




Full View


Tags:    

Similar News