- நோய்களால் ஏற்படும் மரணங்களில் இதயநோய்தான் முதலில் இருக்கிறது.
- புற்றுநோயால் லட்சக்கணக்கான பேர் உயிர் இழக்கிறார்கள்.
`நதியின் வழியே நீரின் பயணம் என்பது போல், விதியின் வழியே வாழ்க்கை பயணம்' என்றார் ஓர் அறிஞர். மலையில் இருந்து கடலை நோக்கி பாய்ந்தோடும் நதிநீர் எண்ணிலடங்கா துளிகளை உள்ளடக்கியது. இதில் எல்லா துளிகளுமே கடலை சென்றடைவதில்லை. கணிசமான நீர் பயிர்களுக்கு பாய்கிறது; குடிநீராக பயன்படுகிறது, தொழிற்சாலைகளுக்கு உபயோகமாகிறது. கொஞ்சம் ஆவியாகவும் செய்கிறது. மீதமுள்ள துளிகள் மட்டுமே தனது முழு பயணத்தையும் நிறைவு செய்து கடலை சென்று அடைகின்றன.
இதுபோல்தான் மனித வாழ்க்கையும். மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால் நினைப்பது போல் எல்லாமே நடந்து விடுவதில்லை. நோய்நொடிகள், எதிர்பாராத விபத்துகள் மட்டுமின்றி மழை-வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர்களும் மனித வாழ்க்கையை திசைதிருப்பி விடுகின்றன.
உலக நாடுகளில் எந்த அளவுக்கு பொருளாதார மற்றும் சுகாதார வசதிகள் பெருகி மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து இருக்கிறதோ அந்த அளவுக்கு நோய்களும் அதிகரித்து இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.
இயற்கை மரணங்களை விட நோய்களால் நிகழும் மரணங்கள்தான் அதிகம். நோய்களால் ஏற்படும் மரணங்களில் இதயநோய்தான் முதலில் இருக்கிறது. இதயநோயால்தான் அதிகம் பேர் இறப்பதாகவும், இதற்கு அடுத்த இடத்தில் புற்றுநோய் (கேன்சர்) இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், ''இனி அவன் பிழைப்பது கடினம்'' என்று கைவிரித்துவிட, ''கங்கையில் நீராடினால் நோய் குணமாகலாம்'' என்று யாரோ சொன்னதை கேட்டு, கடைசி நம்பிக்கையாக பெற்றோர் அவனை ஹரித்துவார் அழைத்துச் சென்று இருக்கிறார்கள். அங்கு கங்கையில் அவனை மீண்டும் மீண்டும் மூழ்கச் செய்து குளிக்க வைத்ததில் அவன் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்து போனான்.
புற்றுநோயுடன் தொடர்ந்து போராடினால் கூட அவன் இன்னும் சிறிது காலம் வாழ்ந்து இருக்கக்கூடும். என்ன செய்ய?...விதி முன்கூட்டியே அவன் வாழ்வில் விளையாடிவிட்டது.
இதேபோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாடகி பவதாரிணியின் (இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள்) அகால மரணமும் ஈடுசெய்ய இயலாதது.
விஞ்ஞானமும், மருத்துவமும் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. ஆனால் உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய்க்கு இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோயால் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பேர் உயிர் இழக்கிறார்கள்.
புற்றுநோயால் ஏற்படும் மரணங்களை தடுத்து நிறுத்தும் வகையில், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4-ந்தேதி (இன்று) உலகம் முழுவதும் புற்றுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.