- ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.
- ரத்த தானம் செய்வது பல உயிர்களைக் காப்பாற்றக்கூடிய உன்னத செயல்.
தானங்களில் சிறந்த தானமாக 'ரத்த தான'த்தை மருத்துவத்துறை முன்னிறுத்துகிறது. ஏனெனில் பல்வேறு மருத்துவ அறுவை சிகிச்சைகளின் போதும், ஒரு மருத்துவ நோயாளிக்கு தேவைப்படும் முக்கியமான, முதன்மையான விஷயமாக ரத்தம் இருக்கிறது. ரத்தத்தில் ஏ, பி, ஓ, என்று சில பிரிவுகளும் இருப்பதால், எல்லாராலும் எல்லாருக்கும் ரத்தத்தை அளித்து விட முடியாது.
ஒருவருக்கு தேவைப்படும் சமயத்தில், அவருக்குரிய ரத்த வகையாளரைத் தேடிக் கொண்டுவருவது சிரமம். எனவேதான், ரத்த தானம் என்ற பெயரில், விருப்பப்பட்டு வழங்கும் நபர்களிடம் இருந்து ரத்தம் தானமாகப் பெறப்பட்டு மருத்துவமனை மற்றும் ரத்த வங்கிகளில் இருப்பு வைக்கப்படுகிறது. இப்படி ரத்ததானம் அளிப்பவர்களின் தினமாக உலகம் முழுவதும் ஜூன் 14-ந்தேதியை 'உலக ரத்த நன்கொடையாளர்கள் தினம்' என்று அனுசரித்து வருகிறோம்.
ரத்தத்தில் ஏ, பி, ஓ ரத்த வகையை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி யான கார்ல் லேண்ட்ஸ்டெய்னரின் பிறந்த தினத்தில்தான், நாம் இந்த நாளை கடைப்பிடித்து வருகிறோம். ரத்த தானம் செய்வதன் அவசியம் மற்றும் பாதுகாப்பாக ரத்த தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கம் ஆகும்.
ரத்தம் பெறுபவர்கள் மட்டுமல்ல, ரத்தம் அளிப்பவர்களின் உடலும் பல நன்மைகளைப் பெறுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ரத்த தானம் செய்வது பல உயிர்களைக் காப்பாற்றக்கூடிய உன்னத செயல் என்பதால், இந்த நாளில் அனைவரும் ரத்த தானம் செய்ய உறுதியேற்போம்.