சமையல்

குஜராத் ஸ்பெஷல் நெல்லி சுண்டா

Published On 2023-02-16 09:13 GMT   |   Update On 2023-02-16 09:13 GMT
  • செரிமானக் கோளாறை நீக்கும்.
  • சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.

குஜராத் மாநிலத்தில் பாரம்பரிய முறையில் இனிப்பு, புளிப்பு, உப்பு மற்றும் காரம் என நான்கு சுவையையும் ஒன்றாகக் கலந்து தயாரிக்கப்படுவது 'நெல்லி சுண்டா'. ஊறுகாயைக் குறிக்கும் சொல் 'சுண்டா'. 'நெல்லி சுண்டா' நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:

பெரிய நெல்லிக்காய் - 7

வெல்லம் - 100 கிராம்

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

மிளகுத்தூள் - ½ தேக்கரண்டி

மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - ¼ தேக்கரண்டி

சீரகத்தூள் - ½ தேக்கரண்டி

இஞ்சி - 2 அங்குலத் துண்டு

உப்பு - ½ தேக்கரண்டி

எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

நெல்லிக்காயை நன்றாக சுத்தம் செய்து இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் 20 நிமிடங்கள் வேகவைக்கவும். பின்பு அதை ஆறவைத்து விதைகளை நீக்கி துருவிக் கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில், நெல்லிக்காய் துருவலுடன் வெல்லம் சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.

வெல்லம் கரைந்த பிறகு அதில் இஞ்சி விழுது, மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நெல்லிக்காய் பொன்னிறமாக மாறும் வரை அடிப்பிடிக்கவிடாமல் கிளறவும்.

பின்னர் அந்தக் கலவையில் பெருங்காயத்தூள் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பை அணைக்கவும்.

இப்போது சுவையான 'நெல்லி சுண்டா' தயார்.

இதைக் கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி தினமும் சிறிது சாப்பிட்டு வரலாம்.

Tags:    

Similar News