- கேரட் கப் கேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
- ஈவ்னிங் ஸ்நாக்காக டீயுடன் சேர்ந்து பரிமாற மிகவும் ஏற்றது.
கடைகளில் கிடைக்கும் கேக் வகைகளை பதப்பத்தி பாக்கெட்டுகளில் அடைத்து வைத்து விற்பனை செய்கின்றனர். அதையும் நாம் குழந்தைகள் விருப்பத்திற்காக வாங்கி கொடுக்கிறோம். இவ்வாறு சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் இல்லாத பாக்கெட்டுகளில் அடைத்து வைத்து விற்கப்படும் பொருட்களை வாங்குவதை விடுத்து வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் எளிதாக செய்யக்கூடிய கேரட் கப் கேக் எப்படி செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கேரட்- 1/4 கிலோ
பால்- 250
மைதா- 250 கிராம்
நாட்டு சர்க்கரை- 500 கிராம்
பட்டை தூள்- கால் டீஸ்பூன்
உப்பு- ஒரு சிட்டிகை
பட்டர்- 100 கிராம்
கெட்டி தயிர்
வெண்ணிலா எசன்ஸ்- கால் டீஸ்பூன்
பேக்கிங் பவுடர்- அரை ஸ்பூன்
பேக்கிங் சோடா- கால் டீஸ்பூன்
டிரை கிரேப்ஸ்- அலங்கரிக்க
செய்முறை:
ஒரு பவுளில் பட்டர் மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். நன்றாக கரைந்து வந்ததும் அதில் மைதா மாவு, ஒரு சிட்டிகை உப்பு, வெண்ணிலா எசன்ஸ், கெட்டி தயிர் சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலந்து எடுக்கவும். கட்டியாக இருந்தால் அதில் சிறிது சிறிதாக பால் சேர்த்து கலக்கவும்.
பின்னர் இந்த கலவையில் துருவிய கேரட், டிரை கிரேப்ஸ், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த கேக் கலவையை ஒரு அடிகனமான பாத்திரத்தின் உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து 10 நிமிடத்திற்கு அதனை ஃப்ரீஹீட் செய்ய வேண்டும். ஃப்ரீஹீட் ஆன பிறகு கேக் கலவையை பேப்பர் கப் வடிவங்களில் ஊற்றி அதனை ஒரு பிளேட்டில் வைத்து 25 நிமிடத்திற்கு ஆவி வெளியே போகாத அளவுக்கு மூடி வைத்து சமைக்க வேண்டும்.
நன்றாக வந்துள்ளதா என்பதை ஒரு பல்குத்தும் குச்சி வைத்து கேக் கலவையில் குத்திப்பார்த்து சோதித்து பார்க்கவும். கேக் ஒட்டாமல் வர வேண்டும். அவ்வாறு ஒட்டாமல் வந்தால் கேக் தயார். கேரட் கப் கேக் மீது துருவிய பிஸ்தா சேர்த்து அலங்கரிக்கவும். சுவையான கேரட் கப் கேக் தயார்.