ஹோட்டல் ஸ்டைல் மொறு மொறு காலிஃப்ளவர் 65 செய்யலாம் வாங்க...
- இது அனைவருக்கும் பிடித்தமான ஸ்நாக்ஸ்.
- 15 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்த காலிஃப்ளவர் -1 கப்,
மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்,
கான்ஃபிளவர் மாவு – 2 ஸ்பூன்,
கடலை மாவு – 1 ஸ்பூன்,
காஷ்மீரி சில்லி – 2 ஸ்பூன்,
மிளகு தூள் – 1 ஸ்பூன்,
சீரகத்தூள் -1/2 ஸ்பூன்,
உப்பு – 1ஸ்பூன்,
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்,
தனியா தூள் -1 ஸ்பூன்,
கறிவேப்பிலை -1 கொத்து,
எண்ணெய் – 250 கிராம்.
செய்முறை
அடுப்யில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதிக்கும் போது அதில் அரை ஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், இதை சேர்த்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு சுத்தம் செய்து வைத்து காலிஃப்ளவரை இதில் சேர்த்து பத்து நிமிடம் கழித்து காலிஃப்ளவரை எடுத்து தண்ணீர் இல்லாமல் வடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பவுலில் கான்பிளவர் மாவு, கடலை மாவு, காஷ்மீரி சில்லி தூள், தனியா தூள், கரம் மசாலா, மிளகு தூள், சீரகம் தூள், மஞ்சள் தூள், உப்பு இவை அனைத்தையும் சேர்த்து பிறகு 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி (இது போன்று மசாலா பொருட்களை பொரிக்க தயார் செய்யும் போது அத்துடன் எப்போதும் எண்ணெய் சேர்த்து பிசையும் போது மசாலாக்கள் அதில் நன்றாக ஊறி உதிராமல் இருக்கும் அதே நேரத்தில் நல்ல மொறு மொறுப்பாகவும் இருக்கும்). அத்துடன் லேசாக தண்ணீர் தெளித்து பஜ்ஜி மாவை விட கொஞ்சம் கெட்டியான பதத்தில் மாவை கரைத்து கொள்ளுங்கள்.
காலிஃப்ளவரை மசாலாவில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டிற்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் அதிக சூட்டுடன் இருக்கும் போது காலிஃப்ளவரை போட்டால் கருகி ருசி மாறி விடும். எண்ணெய் அதிகம் சூடாகாமல் காலிஃப்ளவரை பொரித்தால் எண்ணெய் அதிகமாக குடித்து காலிஃப்ளவர் மெது மெது வென்று ஆகி விடும்.
இப்போது காய்ந்த எண்ணெயை மிதமான சூட்டிற்கு மாற்றிய பிறகு, மசாலா கலந்த காலிஃப்ளவரை ஒவ்வொன்றாக எடுத்து போட்டு விடுங்கள். காலிஃப்ளவரை போட்ட உடன் திருப்பி போடக் கூடாது. எதையும் செய்யாமல் இரண்டு நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். எண்ணெய் சலசலப்பு பாதி வரை அடங்கிய பிறகு தான், அதை மறுபுறம் திருப்பிப் போட வேண்டும். எண்ணெய் சலசலப்பு முழுதாக அடங்கிய பிறகு காலிஃப்ளவரை அதிலிருந்து எடுத்து ஒரு டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் உறிஞ்சிய பிறகு கறிவேப்பிலை மேலே தூவி பரிமாறுங்கள்.