பிஸ்கெட்டை வைத்து சாக்லேட் பர்ஃபியா....?
- பிஸ்கெட்டை வைத்து எளிமையா செய்யலாம் பிஸ்கெட் பர்ஃபி.
- குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
என்னது பிஸ்கெட்டை வைத்து சாக்லேட் பர்ஃபியா, அதெப்படி என்று தானே யோசிக்கிறீங்க... நம்ம வீட்டில் இருக்கும் பிஸ்கெட்டை வைத்து எளிமையா செய்யலாம் பிஸ்கெட் பர்ஃபி. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதுமட்டுமல்ல குழந்தைகளே எளிமையா இதனை செய்ய முடியும். அரைமணிநேரத்திலேயே இதனை செய்து முடித்துவிடலாம்.
தேவையான பொருட்கள்:
பிஸ்கெட்- ஒரு பாக்கெட்
கோ கோ பவுடர்- அரைகப்
பொடித்த நட்ஸ்- ஒரு கப்
வெண்ணெய்- 50 கிராம்
சர்க்கரை- அரைகப்
செய்முறை:
இந்த சாக்லேட் பர்ஃபி செய்வதற்கு கிரீம் இல்லாத பிஸ்கெட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் பிஸ்கெட்டை எடுத்து அதனை சிறிது சிறிதாக உடைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பு மிக்சியில் போட்டு பொடித்துவிடக்கூடாது.
அதன்பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பிடித்த சர்க்கரை, கோ கோ பவுடர் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த கலவை கெட்டியாகும் போது வெண்ணெய் சேர்க்க வேண்டும்.
வெண்ணெய் சேர்த்தவுடன் இந்த கலவை சிறிது கெட்டியாகத்தொடங்கும். இந்த நேரத்தில் இந்த கலவையை எடுத்து நாம் ஏற்கனவே உடைத்து வைத்துள்ள பிஸ்கெட் கலவையில் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
இந்த கலவையை வெண்ணெய் தடவிய கேக் மோல்டில் கொட்டி சரி சமமாக சமப்படுத்த வேண்டும். பின்னர் இதனை மூடி ஃப்ரிட்ஜில் 2 மணிநேரம் வைத்து எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து பரிமாறலாம். கோடை விடுமுறையை கொண்டாடும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.