இன்று கலக்கலான மீன் ஆம்லெட் செய்யலாம் வாங்க...
- முட்டை, மீன் வைத்து பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று மீன் ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மீன் - 2
முட்டை - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
கொத்துமல்லி தழை - சிறிதளவு
மிளகாய் தூள் - சிறிதளவு
மிளகு - விருப்பத்திற்கேற்ப
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சுத்தம் செய்த மீனில் மிளகாய் தூள், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்த பின்னர் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து வைக்கவும்.
மீன் சூடு ஆறியதும் முள்ளை எடுத்து விட்டு சதை பகுதியை சிறிது சிறிதாக பிய்த்து வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை கலவையை ஊற்றி அதன் மேல் பிய்த்து வைத்த மீன், கொத்தமல்லி, மிளகு தூள் தூவவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சுவையான வித்தியாசமான மீன் ஆம்லெட் தயார்.