உடலுக்கு வலிமையை தரும் கொள்ளு குருமா
- உடலில் இருக்கும் கொழுப்புக்கள் கரைந்து எடை குறையும்.
- குழந்தைகளுக்கு அதிகம் கொடுத்தால் எலும்புகள் வலுவடையும்.
கொள்ளு உடலுக்கு மிகவும் வலிமையைத் தரும் உணவுப் பொருட்களில் ஒன்று. அத்தகைய கொள்ளுவை அடிக்கடி சாப்பிட்டால், உடலில் இருக்கும் கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை குறையும். அதிலும் குழந்தைகளுக்கு அதிகம் செய்து கொடுத்தால், அவர்களது எலும்புகள் வலுவடையும். மேலும் கொள்ளுவை வைத்து இதுவரை ரசம் தான் செய்திருப்போம். ஆனால் இப்போது அந்த கொள்ளுவை வைத்து ஒரு குருமா செய்யலாம். அந்த கொள்ளு குருமாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கப்
வெங்காயம் - 2
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
அரைப்பதற்கு
வெங்காயம் - 1
தக்காளி - 3
வரமிளகாய் - 6
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - 1 நீளத்துண்டு
பூண்டு - 7 பல்லு
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கசகசா - 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மிக்சியில் வெங்காயம், தக்காளி, மல்லி, சீரகம், இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவல், கசகசா, வரமிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை உரித்து, அதனை நறுக்கிக் கொள்ளவும். பின்னர் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
அதன்பிறகுகொள்ளுவை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் அதனை குக்கரில் போட்டு, தேவையான தண்ணீர் ஊற்றி, வேக வைத்து, பின் அதில் உள்ள நீரை வடிகட்டி விட வேண்டும்.
அடுப்பில் குக்கரை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, நன்கு மணம் வரும் வரை தொடர்ந்து வதக்க வேண்டும். வாசனை நன்கு வரும் போது, அத்துடன் உருளைக்கிழங்கு, வேகவைத்த கொள்ளு மற்றும் உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும்
இப்போது சுவையான கொள்ளு குருமா ரெடி. இதன் மேல் கொத்தமல்லியை தூவி, சாதத்துடன் பரிமாறலாம்.