கொஞ்சம் வித்தியாசமா ஆரோக்கியமான கடுகு சட்னி எப்படி செய்யலாம்னு பாக்கலாமா...?
- கடுகு சட்னி ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடியது.
- சுடச்சுட சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
எப்போது பார்த்தாலும் தேங்காய் சட்னி, கார சட்னி, வேர்க்கடலை சட்னி என்று அரைத்து சாப்பிடுகின்றோம். அந்த வரிசையில் கொஞ்சம் வித்தியாசமான ஆரோக்கியமான இந்த சட்னியையும் சேர்த்துக் கொள்வோமே. இது சுவையில் எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தாலும், ஆரோக்கியத்திற்கு மிக மிக நன்மை தரக்கூடியது. இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
அதை விட சுடச்சுட சாதத்தில் இந்த கடுகு துவையலை போட்டு கொஞ்சமாக நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் வேற லெவல் டேஸ்ட் இருக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் சட்னியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கடுகு- 5 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு- 5 ஸ்பூன்
தக்காளி-2
காய்ந்தமிளகாய்-4
பூண்டு- 6 பல்
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைக்கவேண்டும். கடாய் சூடானதும் அதில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்க்க வேண்டும். கடுகை கறியவிட்டுவிடக்கூடாது. அதன் பின்பு அதே கடாயில் பூண்டு, வரமிளகாய், தக்காளி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வறுத்து வைத்துள்ள கடுகு, வரமிளகாய், கருவேப்பிலை கலவையை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சட்னி அரைப்பது போல அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை உங்களுக்கு இதில் கடுகின் கசப்பு தெரிகிறது என்றால் சிறிய துண்டு வெல்லம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு இந்த சட்னியை தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
தாளிப்பு வேண்டுமென்றால் கடுகு, உளுந்து, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்துக்கொள்ளலாம். ஆனால் இதற்கு தாளிப்பு தேவைப்படாது. சுடச்சுட சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும். அது நம்முடைய விருப்பம் தான். நீங்க மிஸ் பண்ணாம உங்களது வீட்டில் டிரை செய்து பாருங்கள்.
குறிப்பு: கடுகை வறுக்கும் போது கவனம் தேவை. கடுகு கருகி விட்டால் சட்னியின் ருசி மாறிவிடும்.