சமையல்

முளைகட்டிய சிறுதானிய முருங்கைக்கீரை அடை

Published On 2023-06-28 06:17 GMT   |   Update On 2023-06-28 06:17 GMT
  • சிறுதானிய உணவுகள் உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் அள்ளித் தருபவை.
  • எளிதில் செரிமானமாகும் சிறுதானியங்களைக் கொண்டு அடை செய்யலாம் வாங்க..

தேவையான பொருட்கள் :

கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி - தலா கால் கிலோ

தோலுடன்கூடிய முழு கருப்பு உளுத்தம்பருப்பு- 4 டீஸ்பூன்,

முருங்கைக்கீரை - 1 கைப்பிடி,

கொண்டைக்கடலை - 4 டீஸ்பூன்

வெங்காயம் - 1,

இஞ்சி - சிறிய துண்டு,

காய்ந்த மிளகாய் - 6

பூண்டு - 10 பல்,

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயம், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முருங்கைக் கீரையை நன்றாக கழுவி வைத்து கொள்ளவும்.

கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி, தோலுடன்கூடிய முழு கருப்பு உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலையை நன்றாக கழுவி காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும்.

நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்து, இரவு, ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும்.

இதனுடன், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, காய்ந்தமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

அரை மாவை உப்பு சேர்த்து கரைத்து 4 மணிநேரம் அப்படியே வைக்கவும்.

4 மணிநேரம் கழித்து அதில் முருங்கைக்கீரையை சேர்த்து கலந்து கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அரைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுத்தால், சுவையான அடை ரெடி!

பலன்கள்:

கேழ்வரகும், கம்பும் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. குதிரைவாலி, இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவு. கேழ்வரகில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. சாமை, முதுகெலும்பு வலியைக் குறைக்கும். வரகு, உடல் பருமன், மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News