மூட்டுவலியை நீக்கும் முடக்கறுத்தான் குழம்பு
- முடக்கறுத்தான் இலைகளை அரைத்து பூசி குளித்து வரலாம்.
- மலச்சிக்கல் தோன்றும் சமயம் முடக்கறுத்தான் கீரை சாப்பிடலாம்.
மூட்டுகளை முடக்கி வைக்கும் வாதநோயை அகற்றுவதால் இந்த கீரைக்கு முடக்கறுத்தான் கீரை என்று பெயர். தோல் நோய்களுக்கு முடக்கறுத்தான் இலைகளை அரைத்து பூசி குளித்து வரலாம். வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கல் தோன்றும் சமயம் முடக்கறுத்தான் கீரை சாப்பிடலாம்.
முடக்கறுத்தான் கீரை சாப்பிடும் பொழுது சிலருக்கு பேதி உண்டாகும். அதனால் முதலில் சாப்பிடும் பொழுது ஒரு விடுமுறை நாளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.
தேவையான பொருட்கள்:
முடக்கறுத்தான் இலை- 100 கிராம்
வெங்காயம் -2 (பொடிதாக அரிந்து கொள்ளவும்)
தக்காளி- 2
புளி- சிறிய எலுமிச்சம்பழம் அளவு
சாம்பார் பொடி- 2 ஸ்பூன்
மஞ்சள்தூள்- அரை ஸ்பூன்
தனியாதூள்- 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் -2 ஸ்பூன்
வெந்தயம்- கால் ஸ்பூன்
உப்பு- சுவைக்கேற்ப
செய்முறை:
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, முடக்கறுத்தான் இலையை வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் ஆற வைத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் தாளித்து, தக்காளி, வெங்காயம் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் புளியை கரைத்து ஊற்றி, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, தனியா பொடிகளை கலந்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அத்துடன் அரைத்து வைத்துள்ள முடக்கறுத்தான் கலவையை போட்டு உப்பு கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த குழம்பை சூடான சாதத்துடனும், இட்லி, தோசை, பொங்கல் போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிடலாம்.
மூட்டு வலி மற்றும் மாதவிடாய் காலங்களில் உண்டாகும் வயிற்றுவலி, மலச்சிக்கல் போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக அமையும்.