- சிறுதானிய உணவுகளின் மகத்துவத்தை அனைவரும் அறிந்துள்ளனர்.
- சிறு தானிய உணவுகளை தேடி சென்று உண்ணும் நிலைமை தற்போது உள்ளது.
சிறுதானிய உணவுகளின் மகத்துவத்தை அனைவரும் அறிந்துள்ளதால் சிறு தானிய உணவகங்களை தேடி சென்று உண்ணும் நிலைமை தற்போது உள்ளது. இந்த சூழலை இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி சிறுதானிய உணவு பொருட்களை தயாரித்து சிறுதானிய உணவு கூடங்களை அமைத்து சுய தொழில் செய்து வருகிறார்கள். கேழ்வரகு கேக் செய்வது போல கேழ்வரகு பிஸ்கட் செய்வதும் மிக மிக எளிமையான ஒன்றாகும்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு- ஒரு கிலோ,
சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை- அரை கிலோ,
டால்டா அல்லது நெய் அல்லது வெண்ணெய்- அரை கிலோ
கான்பிளவர் மாவு- ஒரு ஸ்பூன்
பேக்கிங் சோடா- கால் ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை, டால்டா அல்லது நெய் அல்லது வெண்ணெய் ஆகியவற்றுடன் ஒரு ஸ்பூன் கான்பிளவர் மாவு மற்றும் கால் ஸ்பூன் அளவு பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளவேண்டும். அதனுடன் தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ள வேண்டும்.
அந்த மாவினை தேவையான வடிவத்தில் அதாவது பிஸ்வடிவத்திற்கு வெட்டி அதன் நடுவே ஃபோர்க் கரண்டியால் கோடுகளாக இட்டு ஒரு பிளேட்டில் வெண்ணெய் தடவி அதில் அந்த பிஸ்கட்களை அடுக்கி மைக்ரோவேவ் ஓவனில் 150 டிகிரி செல்சியசில் சுமார் 30 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுத்து குளிர வைத்து பின்னர் பயன்படுத்தலாம்.
இந்த கேழ்வரகு பிஸ்கட் செய்யும் போது கேழ்வரகு மாவுடன் சுமார் 30 முதல் 70 சதவீதம் வரை வாழை மாவு அல்லது மரவள்ளி மாவு சேர்த்தும் பிஸ்கட் செய்ய முடியும். வாசனைக்கு ஏலக்காய் பொடி செய்தும், தூளாகவும் சேர்த்துக் கொள்ளலாம். மாவு பிசையும் போது உலர்ந்த முந்திரி அல்லது வேர்கடலை பருப்பினை வருத்தும் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது அலங்காரத்திற்காகவும் சுவை மற்றும் சத்துக்களை கூட்டுவதற்காகவும், பிஸ்கட் மேலே தூவுவதற்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.