கோடை காலத்துக்கு இதமான ரோஸ்மில்க் சாகோ டிரிங்க்
- வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான குளிர்பானம் தான் ரோஸ் மில்க்.
- இதுமாதிரி வித்தியாசமான ரோஸ் மில்க்கை ஒருமுறை செய்து பருகிப் பாருங்கள்.
வெயில் காலம் வந்து விட்டது. நம்முடைய வீட்டிலேயே குளிர்பானங்களைத் தயாரித்து குடிப்பது நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். அந்த வரிசையில் எல்லோர் வீட்டிலும் செய்யக்கூடிய ஒரு குளிர்பானம் தான் இந்த ரோஸ் மில்க். பாலை காய்ச்சி, சர்க்கரையை போட்டு, ரோஸ் எசன்ஸ் ஊற்றி கலக்கினோம் என்று இல்லாமல், இதற்கென்று ஒரு பக்குவம் உள்ளது. முறையாக இதுமாதிரி வித்தியாசமான ரோஸ் மில்க்கை ஒருமுறை செய்து பருகிப் பாருங்கள். இதனுடைய சுவைக்கு உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் அடிமையாகி விடுவார்கள். அந்த அளவிற்கு சுவைமிகுந்த ரோஸ்மில்க் சாகோ டிரிங்க்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க...
தேவையான பொருட்கள்:
பால்- 1 லிட்டர்
ஜவ்வரிசி- ஒரு கப்
ரோஸ்மில்க் எசன்ஸ்- தேவையான அளவு
அகர் அகர்- ஒரு ஸ்பூன்
கண்டன்ஸ்டு மில்க்- ஒரு கப்
சப்ஜா விதை- ஒரு ஸ்பூன்
சர்க்கரை- ஒரு கப்
செய்முறை:
முதலில் ஜவ்வரிசியை வேகவைத்து அதனை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரில் அகர் அகர் சேர்த்துய் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் அதில் பால், சர்க்கரை மற்றும் ரோஸ் மில்க் எசன்ஸ், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கலந்து அதனை ஒரு பிளேட்டில் ஊற்றி ஃபிரிட்ஜில் ஒரு மணிநேரத்துக்கு வைக்க வேண்டும். இதனை ஒரு மணிநேரத்துக்கு பிறகு ஜெல்லிகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். ரோஸ்மில்க் ஜெல்லி தயார்.
பின்னர் மீண்டும் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பால் ஆறியதும் அதில் ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலக்க வேண்டும். இப்போது அந்த பாலில் வேகவைத்த ஜவ்வரிசி, சிறிது சிறிதாக வெட்டிவைத்துள்ள ரோஸ்மில்க் ஜெல்லி, ஊறவைத்த சப்ஜா விதை சேர்த்து கலந்து பிரிட்ஜில் வைத்து சில்லென்று பருகலாம். இந்த கோடை காலத்திற்கு ஏற்ற சுவையான ரோஸ்மில்க் சாகோ டிரிங்க் ரெடி. நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள்.