- அடை மாவு போலத்தான் குணுக்கிற்கும் மாவு அரைக்க வேண்டும்.
- போண்டா செய்வது போல கொஞ்சம் திக்காக இருக்க வேண்டும்.
அடை மாவு போலத்தான் இந்த குணுக்கிற்கும் மாவு அரைக்க வேண்டும். அடை மாவை கொஞ்சம் தண்ணீராக அரைப்போம். இந்த குணுக்கிற்கு போண்டா செய்வது போல கொஞ்சம் திக்காக மாவு அரைத்துக் கொள்ள வேண்டும். தஞ்சாவூர் கும்பகோணம் பக்கங்களில் இந்த குணுக்கு ரொம்பவும் பிரபலம். சுவையான முறையில் அதேசமயம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய வகையில் சாமை குணுக்கு செய்வது எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
சாமை - 50 கிராம்
பச்சைப்பருப்பு, கொண்டைக்கடலை - தலா 25 கிராம்
பச்சரிசி - ஒரு டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் சாமை, பச்சைப்பருப்பு, பச்சரிசி அனைத்தையும் அரை மணி நேரம் ஊறவைத்து, இவற்றுடன் ஊறவைத்த கொண்டைக்கடலையையும் சேர்த்து ரவை ரவையாக கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதில் உப்பு, சீரகம், கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக பிசைந்து, சிறிது சிறிதாக கிள்ளி சூடான எண்ணெயில் சிவக்க பொரித்து எடுக்கவும். சுவையான சாமை குணுக்கு தயார். மழைக்காலங்களில் ஈவ்னிங் சூடான டீயுடன் பரிமாற அருமையாக இருக்கும்.