சமையல்

சேமியா வெஜிடபிள் கட்லெட்

Published On 2023-08-28 10:27 GMT   |   Update On 2023-08-28 10:27 GMT
  • காய்கறிகள் உண்ணாத குழந்தைகளுக்கு பல காய்கறிகளை சேர்த்து கட்லெட்களாக செய்து கொடுக்கலாம்.
  • தேநீருடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை அந்தவகையில் மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு. இவை தேநீருடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கட்லெட்டுகளில் பல வகை உண்டு. அதில் சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், ஃபிஷ் கட்லெட், வெஜிடபிள் கட்லெட், பன்னீர் கட்லெட், மற்றும் மஸ்ரூம் கட்லெட் பிரபலமானவை.

காய்கறிகள் உண்ணாத குழந்தைகளுக்கு பல காய்கறிகளை சேர்த்து இவ்வாறு கட்லெட்களாக செய்து கொடுக்கலாம். காய்கறிகள் வேண்டாம் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளும் கூட இதை விரும்பி உண்பார்கள். இவை செய்வதற்கும் எளிமையானவையும் கூட. இவை அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப வேறு வேறு காய்கறிகளை சேர்த்து செய்கிறார்கள். வெவ்வேறு காய்கறிகள் சேர்த்தாலும் உருளைக்கிழங்குக்கு மாற்று கிடையாது. ஏனென்றால் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு தான் காய்கறி கலவை பிரிந்து வராமல் இருக்கச்செய்கிறது.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு- 5 கிழங்கு

கேரட்- 1

பீன்ஸ்- 6 நம்பர்

குடைமிளகாய்- 2

பட்டாணி- 100 கிராம்

பச்சைமிளகாய்- 2

கார்ன்- அரை கப்

இஞ்சி- ஒரு ஸ்பூன்

சோளமாவு- 2 ஸ்பூன்

மைதாமாவு- 3 ஸ்பூன்

அரிசி மாவு- 2 ஸ்பூன்

வறுத்த சேமியா- அரை கப்

மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்

தனியாத்தூள்- ஒரு ஸ்பூன்

சீரகத்தூள்- அரை ஸ்பூன்

சாட் மசாலா- கால் ஸ்பூன்

கரம் மசாலாதூள்- ஒரு ஸ்பூன்

எலுமிச்சை சாறு- ஒரு ஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் வேகவைத்து தோல் உரித்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனுடன் கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளான கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, நறுக்கிய பச்சை மிளகாய், கார்ன், குடைமிளகாய், துருவிய இஞ்சி சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் சோளமாவு, மைதாமாவு மற்றும் மசாலா வகைகளான மிளகாய்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலா தூள், சாட் மசாலா தூள் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக எல்லா காய்கறிகளும், மசாலா வகைகளும் ஒன்றாக திரண்டு வருகிற அளவுக்கு திரட்டி கட்லெட் வடிவத்தில் அதாவது வட்டம் அல்லது நீள்வட்ட வடிவில் தயார் செய்து அதனை ஃப்ரிட்ஜில் 10 நிமிடம் வைக்க வேண்டும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் மைதாவை நீரில் கரைத்து அதனை தனியே எடுத்து வைக்க வேண்டும். பின்னர் ஒரு தட்டில் மைதா மாவை கொட்டி வைக்க வேண்டும். சேமியாவை நிறம் மாறும் அளவுக்கு வறுத்து உடைத்து ஒரு பிளேட்டில் வைத்துக்கொள்ளவும்.

ஃப்ரிட்ஜில் வைத்த கட்லெட்டுகளை எடுத்து அதனை மைதா நீர் கலவையில் முக்கி, மைதா மாவில் புரட்டி எடுத்து சேமியாவில் தோய்த்து எடுத்து இதனை ஒரு பிளேட்டில் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி வைக்க வேண்டும். மறுபடியும் இந்த கட்லெட்டுகளை ஃப்ரிஜில் 10 நிமிடம் ஃப்ரீசரில் வைக்க வேண்டும். இதனை குறைந்தது ஒரு மாதம் அளவிற்கு ஃப்ரீசரில் வைத்தால் கூட கெட்டுப்போகாமல் இருக்கும்.

தேவைப்படும்போது இந்த கட்லெட்டுகளை தேவையான அளவுக்கு ஒரு கடாயில் கட்லெட்டுகள் மூழ்கும் அளவுக்கு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக திருப்பி போட்டு வறுத்து எடுக்கவும். சுவையான சேமியா வெஜிடபிள் கட்லெட் தயார். இதேபோல் சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், ஃபிஷ் கட்லெட், பன்னீர் கட்லெட் என்று விதவிதமாகவும் காய்கறிகளை தவிர மற்ற பொருட்களை கொண்டு கட்லெட்டுகளை தயார் செய்யலாம். செய்து அசத்துங்கள்.

Tags:    

Similar News