இன்று வீட்டிலேயே திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா செய்யலாம் வாங்க...
- இருட்டுக்கடை அல்வா ருசிக்கு பெயர் போனது.
- இந்த அல்வாவின் அசாத்திய ருசிக்கு தாமிரபரணி தண்ணீரும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 2 கப்
நெய் - 200 மி.லி
சர்க்கரை - 4 ½ கப்
வறுத்த முந்திரி – 20
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சேர்த்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளவும்.
மாவை சாஃப்டாக பிசைந்த பின்பு அதில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி இந்த கலவையை 6 மணி நேரம் ஊற வைக்கவும். கலவை நன்கு ஊறிய பின்பு மாவை கையால் எடுத்து நன்கு அழுத்தி நீரில் அப்படியே கரைத்து விடவும்.
ஊற வைத்துள்ள தண்ணீரில் மாவு முழுவதும் கரைந்த பின்பு அதை வடிக்கட்டி பாலை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்துக் கொள்ளவும். இப்போது இந்த பாலை புளிக்க செய்யவும். அதற்கு பாலை பாத்திரத்தில் ஊற்றி இரவு முழுவதும் மூடி வைக்கவும்.
மறுநாள் காலையில் பாத்திரத்தைத் திறந்து பார்க்கும்போது பால் நன்கு புளித்து மேலே ஏடு மிதக்கும். அதை மட்டும் கரண்டியால் நீக்கிவிட்டு பாலை வடிக்கட்டவும். இப்போது அல்வா செய்வதற்கான திக்கான பால் தயார்.
அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து அதில் வடித்து வைத்திருக்கும் பாலை ஊற்றவும்.
சரியாக 15 நிமிடத்திற்கு அடுப்பை மிதமான சூட்டில் வைத்துவிட்டு பாலை கைவிடாமல் கிண்டவும். கரண்டியால் தொடர்ந்து கிளறினால் தான் கெட்டி தட்டாமல் சரியான பதத்தில் அல்வா வரும்.
அடுத்து 3 கப் சர்க்கரையை இதில் சேர்த்து நன்கு கரையும் வரை கிளறவும்.
இரண்டும் நன்கு கலந்து அல்வா பதத்திற்கு வந்தபின்பு கடாயை இறக்கி வைக்கவும்.
சர்க்கரை பாகு
திருநெல்வேலி அல்வா செய்முறையில் சர்க்கரை பாகு தயார் செய்வது மிக மிக முக்கியம். அல்வாவுக்கு நிறத்தைக் கொடுப்பதே சர்க்கரை பாகு தான் என்பதை மறந்து விடாதீர்கள்.
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 5 ஸ்பூன் சர்க்கரையை சேர்க்கவும். மிதமான தீயில் சமைக்கவும். சூட்டில் சர்க்கரை கரைந்து பாகு போல் உருகி வரும். கெட்டி பதம் தட்டாமல் இருக விடாமல் கிளறவும். தண்ணீர் சேர்க்காமல் தயாரிக்கப்படும் இந்த சர்க்கரை பாகு நிறம் மாறிக் கொதிக்க தொடங்கியதும் இறக்கி விடவும்.
திருநெல்வேலி அல்வா
இப்போது மாவு இருக்கும் கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து அதில் கொஞ்சம் கொஞ்சமாகச் சர்க்கரை பாகு சேர்த்து கிளறவும். வெள்ளையாக இருக்கும் மாவு நிறம் மாறி அல்வா நிறத்திற்கு வரும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும்.
இப்போது நெய்யை ஊற்றவும். கரண்டியால் அல்வாவை கிளறி கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக நெய்யை சேர்க்கவும். இறுதியாக வறுத்த முந்திரியை சேர்த்து இறக்கினால் போதும். சுவையான திருநெல்வேலி அல்வா தயார்.
அல்வா தயாரானதும் அதை கையால் தொட்டு பார்க்கவும். கையில் ஒட்டாமல் வந்தால் சரியான பதம் என அர்த்தம்.
இப்போது சூப்பரான திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health