சமையல்

கோதுமை மாவு வடை செய்வது எப்படி?

Published On 2022-08-06 09:02 GMT   |   Update On 2022-08-06 09:02 GMT
  • மாலையில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த ஸ்நாக்ஸ்.
  • கோதுமை மாவில் இன்று வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - ஒரு கப்,

ரவை - அரை கப்,

பச்சரிசி மாவு - 3 ஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு,

தயிர் - அரை கப்,

தண்ணீர் - ஒன்றரை கப்,

பச்சை மிளகாய் - 2,

பெரிய வெங்காயம் - ஒன்று,

இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்,

மிளகு பொடித்தது - ஒரு டீஸ்பூன்,

நறுக்கிய கொத்த மல்லித்தழை,

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,

சீரகம் - அரை டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,

சமையல் சோடா - கால் டீஸ்பூன்.

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் ரவை, தயிர், பச்சரிசி மாவு, தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் விட்டு கெட்டியாக கட்டிகள் இல்லாமல் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த கலவையுடன் பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி துருவல், மிளகைத் தூளாக இல்லாமல் இடித்து சேருங்கள்.

அதனுடன் சீரகத்தை தாளித்து சேருங்கள்.

இவற்றுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், பேக்கிங் சோடா எனப்படும் சமையல் சோடாவை சேர்த்து கொள்ள வேண்டும்.

விருப்பம் இல்லை என்றால் இவற்றை தவிர்த்து விடுங்கள். இந்த எல்லா பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு கெட்டியாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தண்ணீர் இதற்கு மேல் அதிகம் எதுவும் சேர்க்க கூடாது. பின்னர் ஒரு மூடி போட்டு 10 நிமிடம் நன்கு ஊற விட்டு விடுங்கள். அப்போது தான் ரவை ஊறி இன்னும் மாவு கெட்டியாகும்,

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் வடை சுடும் அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொதித்ததும் மீடியம் ஃபிளேமில் வைத்துக் கொண்டு ஒரு கரண்டி மாவை எடுத்து மெதுவாக எண்ணெயில் ஊற்றுங்கள்.

அது அப்படியே பொங்கி மேலே எழும்பி வந்து மிதக்கும். பிறகு இருபுறமும் சிவக்க எல்லா வடைகளையும் இதே போல சுட்டு எடுத்து டீயுடன் அல்லது சாப்பாட்டுடன் கூட வைத்துக் கொண்டு சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு அருமையாக இருக்கும்.

சூப்பரான கோதுமை வடை ரெடி.

Tags:    

Similar News