பெண்களே மார்பகத்தை சுயபரிசோதனை செய்தால் புற்றுநோயை வெல்லலாம்...
- மார்பக புற்றுநோயை கண்டுபிடிப்பது மிகவும் எளிது.
- மார்பகத்தில் வரும் பிரச்சினை பற்றி கணவரிடம் கூட சொல்ல வெட்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் மார்பக புற்றுநோயால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில், இது ஒரு உயிர்க்கொல்லி நோயாக மாறியிருப்பது கவலை தருவதாக உள்ளது. உலகளவில் புற்றுநோய் இறப்புகளில் மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் சதவீதம் 18.1 சதவீதம் ஆகும். எனவே அரசு தொடர்ந்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. நமது உடல் பல வகையான உயிரணுக்களால் ஆனது. உடல் வளர, ஆரோக்கியமாக இருக்க இந்த உயிரணுக்கள் வளர்ந்து பெருகி, மேலும் பல உயிரணுக்களை உருவாக்குகின்றன.
இந்த சீரான பணியில் ஏதேனும் பிறழ்வுகள் ஏற்படும்போது புதிய உயிரணுக்கள் அதிகமாக உருவாகி விடுகின்றன. பழைய உயிரணுக்கள் அவற்றின் கால அளவை மீறி உயிர் வாழ்ந்து விடுகின்றன. இந்த உயிரணுக்கள் ஆரோக்கியமான உயிரணுக்களை தாக்குகிறது. மேலும், அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கின்றது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பெண்களின் மார்பகங்களில் கட்டிகள் உருவாகின்றன.
இது புற்றுநோய் கட்டிகளாக மாறுகின்றன. மார்பக புற்றுநோய் பெண்களுக்கு மார்பகத்தில் பால் சுரக்கும் இடத்தில் வருகிறது. இத்தகைய புற்றுநோய் கட்டிகள் வலியே இல்லாமல் வளரக்கூடியது. இந்த கட்டி சிறிது, சிறிதாக வளர்ந்து கோலிக்குண்டு அளவுக்கு வந்து விடக்கூடியது.
மார்பக புற்றுநோயை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. நம் வீட்டில் உள்ள தாய், மனைவி, மகள் என ஒவ்வொரு பெண்மணியும் முக்கியமானவர்கள். அவர்கள் வீட்டை பொறுப்புடன் நிர்வகிப்பவர்கள். அவர்களுக்கு ஒரு நோய் என ஆஸ்பத்திரிக்கு சென்று படுத்து விட்டால் அந்த குடும்பமே நிலைகுலைந்து போய் விடும். எனவே விழிப்புணர்வுடன் இருந்தால் மார்பக புற்றுநோயை பெண்கள் எளிதில் வெல்லலாம்.
பெண்கள் தங்கள் மார்பகத்தை அவர்களாகவே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தினமும் இவ்வாறு சோதனை செய்ய வேண்டும் என்றில்லை. 15 நாட்களுக்கு ஒருமுறையோ, ஒரு மாதத்துக்கு ஒருமுறையோ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். காலையில் குளிக்கும் போது மார்பகத்தை தொட்டுப்பாருங்கள். இடது மார்பகத்தை வலது கையாலும், வலது மார்பகத்தை இடது கையாலும் சோதித்து பாருங்கள். குளிக்கும்போது அந்த நீரோடு தொட்டு பார்க்கும்போது எந்த கட்டி இருந்தாலும் தெரிந்து விடும்.
வழக்கமாக இருப்பதை விட ஏதாவது கட்டி மாதிரி தெரிந்தாலோ, நரம்பு சுருண்டு இருப்பது போல் நீங்கள் உணர்ந்தாலோ உஷாராகி விட வேண்டும். சிறிய கட்டி தானே, வலி ஒன்றுமே இல்லையே என்று சாதாரணமாக இருந்து விடக்கூடாது. வலி இல்லாத கட்டி 2 வகையை கொண்டது. ஒன்று மார்பக புற்றுநோய் கட்டி, மற்றொன்று மார்பக நார்த்திசுக் கட்டி (Fibroadenoma) எனப்படும் சாதாரண கட்டி. இதில் எந்தவகையான கட்டி உடலில் உள்ளது என்பதை நிபுணத்துவம் பெற்ற சிறப்பு டாக்டர்கள் தான் பரிசோதித்து உறுதி செய்வர்.
சில பெண்கள் மார்பகத்தில் வரும் கட்டி பெரிதான பிறகே மருத்துவரிடம் ஓடுகிறார்கள். இந்த கட்டி பற்றி அவர்கள் தனது கணவரிடம் கூட தெரிவித்து இருக்க மாட்டார்கள். மருத்துவரிடம் சென்றதும் அவர் ஏன் இவ்வளவு தாமதம் செய்தீர்கள் என கேட்பார். பெண்ணின் கணவரையும் கண்டிப்பார். பெண்கள் தங்கள் மார்பகத்தில் வரும் பிரச்சினை பற்றி கணவரிடம் கூட சொல்ல வெட்கப்படுகிறார்கள்.
மருத்துவர் எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட சில பரிசோதனைகளை எடுத்து பார்ப்பார். மார்பகத்தில் உள்ள கட்டி புற்றுநோய் கட்டி தான் என்று தெரியவந்தால் கட்டி உள்ள மார்பகத்தை முழுமையாக அகற்ற வேண்டும் என்பார். கதிரியக்க சிகிச்சை அளிக்க வேண்டியது இருக்கும். கீமோ தெரபி கொடுக்க வேண்டும். இவ்வளவு பெரிய பிரச்சினையாக மாறுவதற்கு உங்களது அலட்சியம் தான் முழுக்க முழுக்க காரணம் ஆகும். உங்கள் உடலை பாதுகாக்க நீங்கள் தவறி விட்டீர்கள் என்று தான் அர்த்தம்.
எனவே மார்பகத்தில் சிறிய கட்டி வந்தவுடன் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளிலும், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் இப்போது ஏராளமான சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர். அவர்களை கண்டிப்பாக போய் பார்க்க வேண்டும்.
தொண்டை கமறல் உள்ளது, இருமல் இருக்கிறது என்றவுடன் தனக்கு கொரோனாவாக இருக்குமோ என அச்சப்பட்டு சோதிக்கச் சொல்லும் பெண்கள், மார்பக பிரச்சினைக்கும் டாக்டர்களின் ஆலோசனைகளை பெற வேண்டும். எனக்கு தெரிந்து தமிழகத்தில் ஒரு ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு புற்றுநோய் வருகிறது. அதில் 50 ஆயிரம் பேர் புற்றுநோய் முற்றிய நிலையிலேயே வருகிறார்கள். அவர்களுக்கு ரேடியேசன் சிகிச்சை கொடுக்க வேண்டும். மேஜர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். இதெல்லாம் தேவையா? என்பதை எண்ணிப்பாருங்கள். ஆரம்பத்திலேயே புற்றுநோய் கட்டியை கண்டுபிடித்து விட்டால் எளிதில் குணப்படுத்தி விடலாம். எனவே பெண்களே அதிஜாக்கிரதையாக இருங்கள்.
தொடர்புக்கு:info@kghospital.com, 98422 66630