மெனோபாஸ் காலத்தில் அதிகரிக்கும் எலும்புச் சிதைவு நோய்...
- சிலருக்கு மெனோபாஸ் மிகவும் வேதனையாக அமையலாம்.
- மாதவிடாய் நின்றவர்கள் மிகவும் ஜாக்கிரதையாய் இருப்பது அவசியம்.
பெண்களில் மாதவிடாய் சுழற்சியின் முடிவைக் குறிக்கும் ஒரு நிலை மெனோபாஸ். இது மிகவும் பொதுவான, இயல்பான நிகழ்வு. இந்த நிலையில் மாதவிடாயின் அசௌகரியத்தை இனி சமாளிக்க வேண்டிய அவசியமில்லை என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் சிலருக்கோ மெனோபாஸ் மிகவும் வேதனையாக அமையலாம். கவலை, மனநிலை மாற்றங்கள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு போன்றவற்றுடன் இது சேர்ந்து நடக்கலாம். சில சந்தர்ப்பங்களில், பெண்களின் இதய, எலும்பு ஆரோக்கியமும் கணிசமாக பாதிக்கப்படுகிறது.
குறிப்பாக மெனோபாஸ் அல்லது மாதவிடாய் நின்ற காலகட்டத்தை அனுபவிக்கும் பெண்கள் இந்தப் பிரச்சினையில் அக்கறை காட்ட வேண்டும். எலும்பு இழப்பைத் தடுக்க முயல வேண்டும். மெனோபாஸ் காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ்(எலும்புச் சிதைவு நோய்) ஆபத்து அதிகரிக்கிறது, எலும்பு இழப்பு தூண்டப்படுகிறது. ஒரு ஆய்வின்படி, மெனோபாஸ் காலத்தில் 20% எலும்பு இழப்பு ஏற்படலாம். உலகளவில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பத்து பெண்களிலும் ஒருவரை ஆஸ்டியோபோரோசிஸ் பாதிக்கிறது.
எலும்பு சேதம் அதிகரிப்பு, எலும்பு வலிமைக்குப் பாதிப்பு போன்றவற்றை ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுத்துகிறது. வலி அல்லது அறிகுறிகள் இல்லாமலேயே இந்த நோய் ஏற்படலாம். பெண்களின் எலும்பு வலிமையைப் பராமரிப்பதில் ஈஸ்ட்ரோஜன் முக்கிய பங்கு வகிக்கிறது. மெனோபாஸ் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் எலும்பு இழப்பு ஏற்படுகிறது. மாதவிடாய் நின்ற முதல் ஐந்து வருடங்களில் பெண்கள் 10% வரை எலும்பை இழப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் குறிப்பாக மாதவிடாய் நின்றவர்கள் மிகவும் ஜாக்கிரதையாய் இருப்பது அவசியம். ஏனெனில் இவர்களுக்கு எலும்பு உடைந்துவிட்டால் சரிசெய்வது சற்று கடினம்.
எலும்பை வலுவாக வைத்திருக்க வைட்டமின் D முக்கியம். சத்தான உணவினை நாம் சாப்பிடுவது மிக முக்கியம் இல்லையெனில் என்றாவது ஒருநாள் இதுபோன்ற நோய்களுக்கு ஆளாகக்கூடும். அன்றாட உணவில் வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்களை சேர்த்து கொள்ள வேண்டும்.