பெண்கள் உலகம்

பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு இவை தான் காரணம்...

Published On 2023-07-07 07:31 GMT   |   Update On 2023-07-07 07:31 GMT
  • நகர்ப்புறங்களில் வாழும் பெண்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • 40 வயதுக்கு மேல் இது ஆபத்தையே தரும்.

பெண்களுக்கு ஏற்படுகிற புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இது நகர்ப்புறங்களில் வாழும் பெண்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள லட்சம் பெண்களில் 32 பேருக்கு மார்பக புற்றுநோய் உள்ளது என்றும், இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் சொல்கிறது.

இந்த நோய் வருவதற்கு பரம்பரைதான் முக்கிய காரணம். குடும்பத்தில் அம்மா, அக்கா, தங்கை மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு மார்பக புற்றுநோய் வந்திருக்குமானால், அந்த குடும்பத்தில் பிறந்த மற்றவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் தராத பெண்களுக்கும், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலம் பயன்படுத்திய பெண்களுக்கும் இது வருவதுண்டு.

சிறு வயதிலேயே திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்வதும் இந்த நோய்க்கு வரவேற்பு தருகிறது. கோவிலுக்கு செல்லும்போதும், வீட்டில் விசேஷ நாட்களின்போதும் மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காக பெண்கள் சில ஹார்மோன் மாத்திரைகளை சாப்பிடுவார்கள். இளம் வயதில் இதை எடுத்துக்கொண்டாலும் 20 வருடங்கள் கழித்து மார்பகப் புற்றுநோய்க்கு அது வழி அமைத்து விடுகிறது. பெண்களுக்கு மார்பக வளர்ச்சிக்கு பெரிதும் துணைபோவது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். இது அளவுக்கு மீறி சுரந்து விட்டால் மார்பக வளர்ச்சியை அதிகப்படுத்தி விடும்.

இளம் வயதில் இது அழகாக இருக்கலாம். 40 வயதுக்கு மேல் இது ஆபத்தையே தரும். குறிப்பாக, இன்றைய இளம் பெண்கள் விரைவு உணவையும் பாக்கெட் உணவையும் மிகவும் விரும்பி உண்கிறார்கள். இவற்றில் உள்ள கொழுப்பு அமிலங்கள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பைத் தூண்டுகின்றன. இதன் விளைவால் உடல் பருமன் ஏற்படுகிறது. அதே வேளையில் மார்பகத் திசுக்களும் பெருகுகின்றன. இது இயற்கையை மீறி நிகழ்வதால், மார்பகத்தில் கட்டிகள் உருவாகவும் இது வழி செய்கிறது. அந்தக் கட்டி புற்றுநோயாக மாறுவதற்கும் இடம் தருகிறது.

குழந்தைகள் அதிகம் பெற்றுக்கொண்ட பெண்களுக்கும், குழந்தையே இல்லாத பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருகிற வாய்ப்பு அதிகம். அதேபோல 50 வயதுக்கு மேல் மாதவிடாய் நிற்பவர்களுக்கும் இந்த நோய் வருகிறது. கணவர் புகைபிடிப்பவராக இருந்தால், அந்தப் புகையைச் சுவாசிக்கிற மனைவியையும் இது தாக்கும் ஆபத்து பல மடங்கு அதிகம்.

மார்பக தோலின் நிற மாற்றம், தோல் சுருங்குதல், மார்பக காம்புகள் உள்நோக்கி இழுத்தல், காம்பிலிருந்து நீர்க்கசிவு, ரத்தக்கசிவு, மார்பகத்தில் கட்டி, வலி, அக்குளில் கட்டி போன்றவை மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள். இவற்றை அலட்சியம் செய்யாமல் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை பெற்றுக்கொண்டால் முழுவதுமாக குணம் கிடைக்கும். ஆனால், இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் இந்த அறிகுறிகளை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு, நோயைக் கவனிப்பதில் தாமதப்படுத்தி, நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருவதால் இந்த நோயால் மரணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகம்.

Tags:    

Similar News