செய்திகள் (Tamil News)

வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பது குறித்து 3 மணிக்கு பிறகு முடிவு: ராஜேஷ் லக்கானி பேட்டி

Published On 2016-05-16 08:44 GMT   |   Update On 2016-05-16 08:44 GMT
மழை பாதிக்கப்பட்ட இடங்களில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிப்பது குறித்து 3 மணிக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
சென்னை:

மழை பாதிக்கப்பட்ட இடங்களில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிப்பது குறித்து 3 மணிக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு மணி நேர நிலவரப்படி 42.1 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், மழை பாதித்த 8-க்கும் அதிகமான இடங்களில் வாக்குப் பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில் வாக்குப் பதிவு நேரத்தை நீட்டிப்பது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி லக்கானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் வாக்குப்பதிவு நேரத்தை நீடிக்க வேண்டும் என தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை மனுக்கள் வழங்கியுள்ளது.

டெல்டா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பாதிப்பு இடங்களில் வாக்குப்பதிவு நேரத்தினை நீட்டிக்க ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது மழை நின்று இருப்பதால் 3 மணி நேர நிலவரத்தை பார்த்து பின்னர் முடிவு எடுக்கப்படும்.

மின் தடை உள்ள பகுதியில் மாற்று அவசர விளக்குகள் அளிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் பெரும்பாலும் வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை.

இவ்வாறு தெரிவித்தார்.

Similar News