செய்திகள் (Tamil News)

பொது இடங்களில் உள்ள கட்சி-வேட்பாளர்களின் விளம்பர பேனர்களை அகற்ற வேண்டும்: தேர்தல் ஆணையம் உத்தரவு

Published On 2016-09-28 16:38 GMT   |   Update On 2016-09-28 16:38 GMT
உள்ளாட்சித் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், பொது இடங்களில் உள்ள கட்சி மற்றும் வேட்பாளர்கள் சார்ந்த விளம்பரங்களை அகற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வேட்பாளர்கள், கட்சிகள் விளம்பரத்தட்டிகள், விளம்பரப்பட்டிகைகள் மற்றும் சுவரொட்டிகளிலுள்ள விளம்பரங்களை அகற்றுதல் மற்றும் அழித்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

வேட்பாளர்கள் பெயரிலோ. கட்சிகள் பெயிரிலோ மற்றும் இது தொடர்பான எந்தவொரு வாசகங்களோ அச்சிடப்பட்ட எவ்விதமான விளம்பரத்தட்டிகளோ, விளம்பரப்பட்டிகைகளோ, சுவரொட்டிகளோ, சுவரில் எழுதப்பட்டோ மாநிலத்தின் எந்தவொரு பொது இடத்திலும் இருத்தல் கூடாது. இது தொடர்பாக அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நடைமுறைப்படுத்திய விதிகளையே நடைபெறவிருக்கின்ற 2016, உள்ளாட்சி தேர்தல்களிலும் பின்பற்றிட வேண்டும்.
எவ்விதமான விளம்பரத்தட்டிகளோ, விளம்பரப்பட்டிகைகளோ, சுவரொட்டிகளோ விளம்பரப்படங்களோ மாநிலத்தின் எந்தவொரு பொது இடத்திலும்; இருப்பின் அவைகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

சுவர்களில், வேட்பாளர்களின் பெயர்களோ, கட்சிகளின் பெயர்களோ அல்லது அது தொடர்பான வாசகங்களோ வண்ணப்பூச்சுகளால் எழுதப்பட்டிருந்தால், அவைகள் அனைத்தையும் இடத்திற்கு தகுந்தாற்போல் வேறுவிதமான வண்ணப்பூச்சுளால் மறைத்து உடனடியாக அழிக்கப்பட வேண்டும். இப்பணியை எவ்வித இடர்கள் இல்லாமலும் எவ்விதமான பாகுபாடின்றியும் மேற்கொண்டிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News