செய்திகள் (Tamil News)

அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் நிலவரி முழுவதும் தள்ளுபடி: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

Published On 2017-02-01 09:10 GMT   |   Update On 2017-02-01 09:10 GMT
அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுவதும் தள்ளுபடி என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

சென்னை:

சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும், வடகிழக்கு பருவமழை மிகக் குறைவாக பெய்துள்ளதால், அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுவதும் தள்ளுபடி செய்ய உத்தர விடப்பட்டுள்ளது.

வறட்சி காரணமாக விவசாயிகள் தங்கள் கடனை தற்போது திரும்பச் செலுத்த இயலாது என்பதால், கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகள் ஆகியவற்றில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன், மத்திய காலக் கடனாக மாற்றியமைக்க வழிவகை செய்யப்படும். இவ்வாறு மாற்றியமைப்பதற்குத் தேவையான அன்னவாரி சான்றிதழ்கள், விரைந்து வழங்கப்பட, நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலம் 3,028 கோடி ரூபாய் பயிர்க் கடனாக இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடன் முழுவதும் மத்தியகாலக் கடனாக மாற்றியமைக்கப்படும்.

பேரிடர் நிவாரண வரையறையின்படி பயிர் சேதங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை உயர்த்தப்பட்டு, 27.10.2015 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையின்படி 33 சதவீதத்திற்கும் மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு, நிவாரண உதவித் தொகை வழங்கப்படும்.

நெல் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு, 5,465 ரூபாய்; நெல் தவிர, இதர நீர்ப் பாய்ச்சப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 5,465 ரூபாய்; மானாவாரி பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 3,000 ரூபாய்; நீண்ட கால பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 7,287 ரூபாய்; முசுக்கட்டை பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 3,000 ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும்.

வறட்சி நிவாரண கோரிக்கை மனு தயார் செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து வறட்சி நிவாரணமாக 39,565 கோடி ரூபாய் கேட்டுள்ளோம். இந்த கோரிக்கையை நான் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை 19.1.2017 அன்று புதுடில்லியில் நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். அதன்படி, இங்குள்ள வறட்சி நிலைமைகளை நேரில் பார்த்து, பரிந்துரை செய்திட, மத்திய அரசு, குழு ஒன்றை 23.1.2017 முதல் 25.1.2017 வரை ஆய்வு செய்ய அனுப்பி வைத்தது. அந்தக் குழு தனது ஆய்வை முடித்துள்ளது.

மத்திய அரசுக்கு, அந்தக்குழு விரைவில் அறிக்கையை அளித்து, அதன் அடிப்படையில் நமக்கு மத்திய அரசின் நிதி உதவி கிடைக்கும் என நான் நம்புகிறேன்.

அதே சமயம், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர்கள் புல எண் வாரியாக கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கு போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இது கூடிய விரைவில் முடிக்கப்படும். அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டினை ஒரே சமயத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

இனிவரும் காலங்களில், இதுபோன்ற இயற்கை இடர் பாடுகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு, தக்க பயிர் காப்பீடு திட்டத்தை மேலும் பரவலாக்க, அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

காப்பீடு செய்த விவசாயிகள் பயிர் காப்பீட்டு இழப்பீடாக பயிர் வகைகளைப் பொறுத்தும், மாவட்டத்தைப் பொறுத்தும், ஏக்கருக்கு ரூபாய் 8,000 முதல் 50,000 வரை இழப்பீட்டுத் தொகை பெறமுடியும். இதுதவிர, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, நெல் போன்ற பாசனப் பயிர்களுக்கு ஏக்கருக்கு 5465 ரூபாயும், மானாவாரி பயிர்களுக்கு, ஏக்கருக்கு 3000 ரூபாயும் பெறுவர். எனவே, இந்த ஆண்டு வழங்கப்படும் நிவாரணம் கணிசமாக உயர்ந்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வறட்சி காரணமாக வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு, போதிய வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 100 நாட்கள் பணி வரம்பு என்பதை 150 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம், ஏரிகள் தூர் வாருதல், குளங்கள் சீரமைத்தல் மற்றும் பாசன வாய்க்கால்கள் தூர்வாருதல் போன்ற பணிகள் 3,400 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தேன். இந்தப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை பெறுவர்.

வறட்சி காரணமாக ஏற்படும் கால்நடை தீவனப் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை வாயிலாக பசுந்தீவனம், அடர்தீவனம் மற்றும் உலர் தீவனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம், நீர் ஆதாரங்கள் மற்றும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கென 160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளபட்டுள்ளன.

கிராமப் புறங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பற்றாக் குறையை தீர்க்கும் வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம், நீர் ஆதாரங்கள் மற்றும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் பணிகள், 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News