செய்திகள் (Tamil News)

உள்ளாட்சி தேர்தலை நடத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?: ஐகோர்ட்டு கேள்வி

Published On 2017-02-10 07:52 GMT   |   Update On 2017-02-10 07:52 GMT
உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலை நடத்த இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இவ்வளவு காலதாமதம் செய்தது ஏன்? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
சென்னை:

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடக்க இருந்தது.

இந்த தேர்தலில், எஸ்.டி. பிரிவினருக்கு தகுந்த இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வழக்கு தொடரப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தை பின்பற்றி பிறப்பிக்கப்படவில்லை.

எனவே, தேர்தல் அறிவிப்பை ரத்து செய்தார். புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, டிசம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 4-ந்தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் நூட்டி மோகனராவ், எஸ்.எம். சுப்பிரமணியம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘தனிநீதிபதி கிருபாகரன் பிறப்பித்த தீர்ப்பில், கிரிமினல்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளை பிறப்பித்துள்ளார்.

இந்த நிபந்தனைகளை மாநில தேர்தல் ஆணையம் அமல்படுத்த முடியாது. தமிழக அரசு இதுதொடர்பாக சட்டம் இயற்றிய பின்னரே, தேர்தல் ஆணையம் அதை அமல்படுத்த முடியும்’ என்று கூறினார்.

இதற்கு தி.மு.க. தரப்பு வக்கீல் பி.வில்சல் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். ‘சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் பிறப்பித்த தீர்ப்பில், மாநில தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி அமைப்பாகும். இந்த அமைப்பு சுதந்திரமாக செயல்படவேண்டும்.

ஒருவேளை மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட ஐகோர்ட்டை ஆணையம் அணுகலாம் என்று கூறியுள்ளது. தற்போது தனி நீதிபதி பிறப்பித்த புதிய விதிமுறைகளை, தேர்தல் ஆணையமே அமல்படுத்த முடியும். ஆனால், தேவையில்லாமல், அரசும், தேர்தல் ஆணையமும் இந்த விவகாரத்தில் காலதாமதம் செய்கிறது’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலை நடத்த இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இவ்வளவு காலதாமதம் செய்தது ஏன்? தனி நீதிபதி டிசம்பர் மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கும் நிலையில், அதுகுறித்து ஏன் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் ஆர்.பிரதாப்குமார், இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் ஆஜராக உள்ளார். தற்போது அவர் வேறு பணியில் உள்ளதால், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்’ என்றார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற செவ்வாய்க்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Similar News