செய்திகள் (Tamil News)

ஆர்.கே.நகரில் துணை ராணுவம் - மத்திய போலீசார் குவிப்பு

Published On 2017-04-06 08:51 GMT   |   Update On 2017-04-06 08:51 GMT
தேர்தல் பாதுகாப்புக்காக துணை ராணுவ படையினர், மத்திய - மாநில போலீசார் ஆர்.கே.நகரில் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை அமைதியாக நடத்தவும், நேர்மையான முறையில் வாக்குப்பதிவு நடைபெறவும் தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடா மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க வேண்டும் என்று டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் தி.மு.க.வினர் புகார் செய்தனர். அப்போது ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து வடசென்னை மாநகர கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன், இணை கமி‌ஷனர் ஜோஷி நிர்மல்குமார், துணை கமி‌ஷனர் ஜெயக்குமார் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும், உதவி கமி‌ஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பதில் 22 போலீஸ் அதிகாரிகள் புதியதாக நியமிக்கப்பட்டனர்.

வடசென்னை கூடுதல் கமி‌ஷனராக ஜெயராம், இணை கமி‌ஷனராக பாஸ்கரன், துணை கமி‌ஷனர்களாக சா‌ஷங்க்காய் (வண்ணாரப்பேட்டை), ராமர் (புளியந்தோப்பு) ஆகியேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர 4 உதவி போலீஸ் கமி‌ஷனர்களும், 14 இன்ஸ்பெக்டர்களும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று இரவே பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இவர்கள் அனைவரும் உடனடியாக தேர்தல் பணியை தொடங்கினர். போலீஸ் கமி‌ஷனர் கரன்சின்காவுடன் இணைந்து 22 போலீஸ் அதிகாரிகளும் ஆர்.கே.நகர் தொகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பாதுகாப்பு பணியை மேற்கொள்வது குறித்து ஆலோசனையும் நடத்தினர்.

நேற்று அதிகாலையில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதை போல மீண்டும் பணப்பட்டு வாடா நடந்து விடக்கூடாது என்பதில் போலீசார் மிகுந்த கவனத்துடன் பணியாற்றி வருகிறார்கள்.

ஆர்.கே.நகர் தேர்தல் பாதுகாப்புக்கு ஏற்கனவே 8 கம்பெனி துணை ராணுவ படையினர் வந்திருந்தனர். நேற்று கூடுதலாக 2 கம்பெனி வந்துள்ளது. இதன் மூலம் தேர்தல் பாதுகாப்புக்கு தேவையான துணை ராணுவ படையினர் முழுவதுமாக வந்து விட்டனர். மத்திய போலீசாரும் வருகை தந்துள்ளனர்.

இதன் மூலம் துணை ராணுவ படையினர், மத்திய - மாநில போலீசார் ஆர்.கே.நகரில் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Similar News