செய்திகள் (Tamil News)

சசிகலாவை நீக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தை: கே.பி.முனுசாமி

Published On 2017-04-24 08:39 GMT   |   Update On 2017-04-24 08:39 GMT
அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை வெளியேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று ஓ.பி.எஸ். அணியின் சார்பில் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை:

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிளவுப்பட்டதால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்துள்ளது.

அ.தி.மு.க.வுக்கு மீண்டும் இரட்டை இலை சின்னம் கிடைக்க இரு அணிகளும் ஒன்றாக இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று மாலை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஓ.பி.எஸ். அணியினரும், எடப்பாடி பழனிசாமி அணியினரும் பேச்சு நடத்த இருப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் இரு அணிகளும் இன்று இணைப்பு பேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஓ.பி.எஸ். அணியினர் பேச்சுவார்த்தைக்கு திடீர் முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.


அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை வெளியேற்ற வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று ஓ.பி.எஸ். அணியின் கே.பி.முனுசாமி இன்று மதியம் அறிவித்தார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-

இரு அணிகளுக்கும் இடையே பேச்சு நடத்த 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது முதல் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்கள் அவர்கள் அணியில் இருந்து வந்து கொண்டே இருக்கிறது.

அவர்கள் தரப்பில் இருந்து வரும் கருத்துக்கள் குழப்பங்களையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

வைத்திலிங்கம் குழு அமைக்கப்பட்டுள்ளது என்கிறார். அந்த குழுவில் இடம் பெற்றுள்ள இன்னொருவரோ “குழு அமைக்கப்படவில்லை” என்று சொல்கிறார். இப்படி மாறுபட்ட கருத்துக்களை அவர்கள் கூறி வருகின்றனர்.

பேச்சுவார்த்தை நடைபெறும் போதுதான் கருத்துக்களை பரிமாற வேண்டும்.

எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் மறந்து பேச்சுவார்த்தையின் போது தான் பேச வேண்டும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆனால் அவர்கள் கட்டுப்பாடற்ற நிலையில் சில கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இது மேலும் பல குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஒரு முடிவு எடுக்க முடியாத நிலையில் இவ்வாறு பேசி வருகிறார்கள். இவர்களை யாரோ ஒருவர் பின்னால் இருந்து இயக்குகிறார்.

நாங்கள் ஏற்கனவே வைத்த 2 கோரிக்கைகளில் எந்தவித மாற்றமும் இல்லை. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்.

சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் கட்சியை விட்டு நீக்க வேண்டும். இந்த இரண்டு கோரிக்கையும் நிறைவேற வேண்டும் என்பதே எங்களின் நிபந்தனையாகும்.


இவை தவிர வேறு எந்த நிபந்தனைகளையும் நாங்கள் வைக்கவில்லை.

நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் இன்று வெளியான செய்தியில் கூட சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் இருப்பது தெரிகிறது. இது மேலும் பல குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News