செய்திகள் (Tamil News)

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தாலும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நீடிக்கும்: விஜயதரணி

Published On 2017-09-15 05:58 GMT   |   Update On 2017-09-15 05:58 GMT
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தாலும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நீடிக்கும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. கட்சிக்குள் நிலவிய கோஷ்டி பூசல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை தினகரன் ஆதரவு எம்.எல். ஏ.க்கள் வாபஸ் பெறுவதாக கவர்னரிடம் மனு கொடுத்தனர்.

ஆட்சிக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களே மனு கொடுத்ததால் அவர்களிடம் விளக்கம் கேட்டு, சபாநாயகர் நோட்டீசு அனுப்பினார். இதற்கு பதில் அளிக்கும் காலக்கெடு நேற்றுடன் முடிந்து போனது.

இதனால் ஆட்சிக்கு எதிராக மனு கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் கூறுகிறார்கள். 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்தால் எடப்பாடி ஆட்சி தப்பித்துக் கொள்ளும்.

சட்டசபைக்கு வரும் எம்.எல்.ஏ.க்களில் பெரும் பான்மையை நிரூபித்தால் போதும் என்பதே சட்டம். அதன்படி பார்க்கும்போது, இப்போது இருக்கும் எம்.எல்.ஏ.க்களில் எடப்பாடி அணிக்கே கூடுதல் எம்.எல். ஏ.க்கள் இருப்பார்கள்.

இதன் மூலம் அவரது ஆட்சி இப்போதைக்கு நீடிக்கும். ஆனால் நீண்ட நாள் ஆட்சியை நடத்த முடியாது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மற்றும் ஆர்.கே. நகர் தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தி ஆக வேண்டும்.

அந்த இடைத்தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி இணைந்து போட்டியிடும். இதில் உறுதியாக தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். இப்போது தி.மு.க. கூட்டணிக்கு 98 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இடைத்தேர்தலில் அமோக வெற்றியை ஈட்டுவதன் மூலம் தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆவார். அதன் பிறகே தமிழக மக்கள் பிரச்சினைக்கு முடிவு ஏற்படும். இப்போது தமிழக மக்கள் அடிப்படை தேவைக்கு கூட போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை உள்ளது. தங்களின் உரிமைகளை போராட்டம் மூலமே பெற வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.எடப்பாடி அரசு நீட் விவகாரம் உள்ளிட்ட எந்த பிரச்சினையிலும் தீர்வு காணவில்லை. இதனால் தமிழகமே போராட்ட களமாக மாறி விட்டது.

அதே நேரம் அ.தி.மு.க.வின் தினகரன் தரப்பினர் நீட் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். ஆட்சியை எதிர்த்து பல்வேறு மக்கள் பிரச்சினைக்காக தினகரன் குரல் கொடுத்து வருகிறார். கட்சிக்கு அப்பாற்பட்டு அவர் செயல்படுகிறார்.

குட்கா பிரச்சினையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க கோர்ட்டு தடை விதித்துள்ளதை வரவேற்கிறேன். தமிழகத்தில் எந்த பிரச்சினைக்கும் கோர்ட்டு மூலம்தான் தீர்வு காணும் நிலை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News