செய்திகள் (Tamil News)
தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் மாநில தலைவர் திருநாவுக்கரசருக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது.

தமிழக காங்கிரஸ் புதிய தலைவரை தேர்வு செய்ய சோனியாவுக்கு அதிகாரம்: பொதுக்குழுவில் தீர்மானம்

Published On 2017-10-06 10:52 GMT   |   Update On 2017-10-06 10:52 GMT
புதிய மாநில தலைவர் தேர்வு மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு ஆகியவற்றுக்கு சோனியாவுக்கு அதிகாரம் அளித்து தமிழக காங்கிரஸ் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை:

தமிழக காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் அமைப்பு தேர்தல் கடந்த 3 மாதங்களாக பல்வேறு கட்டங்களாக நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 688 பேர் பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

வழக்கமாக கட்சியின் பொதுக்குழு கூடிதான் புதிய தலைவருக்கான பெயரை பரிந்துரை செய்யும். அதை அகில இந்திய தலைமை பரிசீலித்து ஒப்புதல் வழங்கும். ஆனால் காங்கிரசில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று 19 ஆண்டுகள் ஆகிறது. அதன் பிறகு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று தான் பொதுக்குழு கூடியது.

கூட்டத்துக்கு மாநில தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலை வகித்தார். தேர்தல் அதிகாரிகள் பாபி ராஜ், சஞ்சய்தத், முன்னாள் மாநில தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.பி.க்கள் சுதர்சன நாச்சியப்பன், ஆரூண், ராணி,

எம்.எல்.ஏ.க்கள் கே.ஆர். ராமசாமி, வசந்தகுமார் மற்றும் யசோதா, நாசே. ராமச்சந்திரன், நாசே. ராஜேஷ், சிரஞ்சீவி, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ். திரவியம், ரூபிமனோகரன், சிவராஜசேகர், கராத்தே தியாகராஜன், வீரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் ரங்கபாஷ்யம், வி.ஆர். சிவராமன், எஸ்.கே. நவாஸ், டெல்லி பாபு, ஓட்டேரி தமிழ்செல்வன், மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம்பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

புதிய மாநில தலைவர் தேர்வு மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு ஆகியவற்றுக்கு சோனியாவுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News