துருக்கி விண்வெளி ஆய்வு மையத்தில் பயங்கரவாத தாக்குதல்: 4 பேர் பலி
- துருக்கியில் பயங்கர சத்தத்துடன் வெடிச்சத்தம் கேட்டது.
- பதில் தாக்குதலில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அங்காரா:
துருக்கி தலைநகர் அங்காராவில் விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமையகம் அமைந்துள்ளது.
இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் இன்று திடீரென வெடிச்சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்டது.
இந்த தாக்குதலில் 4 பேர் பலியாகினர் என்றும், 14 பேர் காயமடைந்தனர் என்றும் முதல் கட்ட தகவல் வெளியானது. பதில் தாக்குதலில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து அங்கு பாதுகாப்புப் படையினர், போலீசார், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுகள் விரைந்துள்ளன. இதனால் அப்பகுதி கலவர பகுதியாக காட்சி அளிக்கிறது. குர்தீஷ் பிரிவினைவாதிகள் அல்லது ஐ.எஸ். பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக துருக்கி அதிபர் எர்டோகன் ரஷியா சென்றுள்ள நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.