செய்திகள் (Tamil News)

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட வாகனங்களுக்கு இன்று அடையாள அட்டை: ராஜேஷ் லக்கானி தகவல்

Published On 2017-11-30 04:27 GMT   |   Update On 2017-11-30 04:28 GMT
ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட வாகனங்களுக்கு இன்று அடையாள அட்டை வழங்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.
சென்னை:

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:-

இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதத்தில், ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களின் வாகனங்களுக்கு 30-ந் தேதி (இன்று) முதல் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் 10 ஆயிரத்து 200 இருசக்கர வாகனங்கள் மற்றும் 5 ஆயிரத்து 70 நான்கு சக்கர வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. அந்த வாகனத்தின் உரிமையாளர்களுக்கு 30-ந் தேதி முதல் தற்காலிக அடையாள அட்டை வழங்கப்படும்.

கடத்த முறை கண்காணிப்பு கேமராக்கள் பொதுமக்கள் அதிகமாக கூடும் 50 இடங்களில் 50 ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. தற்போது 196 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. அதிலும் குறிப்பாக, குடியிருப்புகள் உள்ள தெருக்களில் அதிகமாக பொருத்தப்படுகிறது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 320 விவிபிஏடி எந்திரங்கள் பெங்களூரில் இருந்து 30-ந் தேதி வரவுள்ளன.

தி.மு.க. எம்.எல்.ஏ. சுதர்சனம் அளித்த மனுவில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் அந்த தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் இருப்பதாக கூறியிருக்கிறார். அதை பரிசீலித்து வருகிறோம். அதில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இறுதிப் பட்டியலில் அதை சரிபார்த்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News