செய்திகள் (Tamil News)

அ.தி.மு.க.வின் கோட்டையாக திகழும் கோவையை குறி வைக்கும் ரஜினி - கமல்ஹாசன்

Published On 2018-05-15 05:25 GMT   |   Update On 2018-05-15 05:25 GMT
அ.தி.மு.க.வின் அசைக்க முடியாத கோட்டையாக விளங்கும் கோவை மண்டலத்தில் பலமாக காலூன்ற ரஜினியும், கமலும் திட்டமிட்டுள்ளனர். #RajiniMakkalMandram #MakkalNeedhiMaiam
சென்னை:

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்குவது கோவை மண்டலம் தான். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வென்று ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமே கொங்கு மண்டலம் தான்.மொத்தம் உள்ள இடங்களில் 90 சதவீத இடங்களை அ.தி.மு.க. வென்றது.

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் கவுண்டர் இன மக்கள் அதிகமாக உள்ளனர். கொங்கு மண்டலத்தில் இருந்து மட் டும் 47 எம்.எல்.ஏக்களும், 9 எம்.பி.க்களும் வெற்றி பெற்றனர். இதனாலேயே தி.மு.க.வால் அங்கு வெற்றி பெற முடியவில்லை.



ஜெயலலிதா இருந்தவரை ரஜினி அரசியலில் நுழைவது பற்றி முடிவே எடுக்கவில்லை. கமல் அரசியலை பற்றி நினைத்துகூட பார்க்கவில்லை. ஆனால் இருவருமே இப்போது வேகம் எடுக்கிறார்கள்.

கட்சியை தொடங்காமலேயே மன்றத்தின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்திக்கொண்டிருக்கும் ரஜினி கோவையில் தான் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார்.

போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் நடந்த இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்துக்கு பின்னர் கோவை மண்டலத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இளைஞரணி நிர்வாகிகளுடனான ஆலோசனையை வெளியில் அறிவித்தவர்கள் இதனை ரகசியமாகவே வைத்திருந்தார்கள்.

கோவையில் மாநாடு நடத்தினால் கூட்டம் சேர்க்க முடியுமா? என்பது குறித்தும் விவாதித்திருக்கிறார்கள். கோவையில் பா.ஜ.க.வுக்கும் செல்வாக்கு உள்ளது. இதன் மூலம் அந்த கட்சியின் வாக்குகளை கவரவும் ரஜினி திட்டமிட்டுள்ளார்.

இதை அறிந்த கமலும் கோவை மண்டலத்தில் தான் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருக்கிறார். கமல் கட்சி தொடங்கிய உடன் முதல் சுற்றுப்பயணமாக ஈரோட்டுக்கு தான் சென்றார். இதனால் கோவை மண்டலத்தை தக்க வைக்க வேண்டிய கட்டாயம் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. #RajiniMakkalMandram #MakkalNeedhiMaiam

Tags:    

Similar News