பேஜர் தாக்குதலுக்கு பதிலடி.. வடக்கு இஸ்ரேல் மீது 140 ஏவுகணைகளை சரமாரியாக ஏவிய ஹிஸ்புல்லா
- ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்பட 37 பேர் உயிர் இழந்தனர்
- சுமார் 140 ராக்கெட்டுகளை சரமாரியாக ஏவி பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.
உலகமே அதிரும் வகையில் 2 நாட்களுக்கு முன்பு ஒரே சமயத்தில் லெபனானில் பேஜர் கருவிகள் வெடித்துச் சிதறியது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் வாக்கி டாக்கி கருவிகள் வெடித்துச் சிதறியது. இந்த இரு சம்பவங்களிலும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்பட 37 பேர் உயிர் இழந்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தான் காரணம் என்றும் இது முழுமையான போர் பிரகடனம் என்றும் ஹிஸ்புல்லா தலைவர் தெரிவித்திருந்தார். இதற்கிடையே லெபனானில் ஹிஸ்புல்லா தளங்கள் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலும் நடத்தியதால் பதற்றம் அதிகரித்திருந்தது.
இந்நிலையில் வடக்கு இஸ்ரேலிய பகுதிகள் மீது ஹிஸ்புல்லா சுமார் 140 ராக்கெட்டுகளை சரமாரியாக ஏவி பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இஸ்ரேலின் விமான படைத்தளங்கள் குறிவைக்கப்பட்டதாக ஹிஸ்புல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது