இந்தியா (National)

மத்திய அரசின் சட்டத்திருத்தம் அரசியலமைப்புக்கு எதிரானது.. உயர்நீதிமன்றம் அதிரடி

Published On 2024-09-20 15:52 GMT   |   Update On 2024-09-20 15:52 GMT
  • இந்த அமைப்பின் உத்தரவுப்படி எந்த ஒரு சமூக வலைதள பதிவையும் கணக்கையும் நீக்க முடியும்
  • இதற்கு எதிராக பிரபல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா உள்ளிட்டோர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த வருடம் [2023] தகவல் தொழில்நுட்ப [ஐடி] சட்டத்தில் கொண்டுவந்த திருத்தும் செல்லாது என்று மும்பை உய்ரநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசின் செயல்பாடுகள் குறித்து சமூக ஊடகங்களில் போலியான மற்றும் தவறான வகையில் பதிவிடப்படும் தகவல்களை கண்டறிந்து நீக்குவதற்காக உண்மை கண்டறியும் குழுவை அந்த சட்டத்திருத்தத்தின்படி மத்திய அரசு அமைத்திருந்தது.

இந்த அமைப்பின் உத்தரவுப்படி எந்த ஒரு சமூக வலைதள பதிவையும் கணக்கையும் நீக்க முடியும். ஆனால் இது அரசை விமர்சிக்கும் எந்த ஒரு கருத்தையும் நீக்க முடியும் என்ற அதிகாரத்தை நிறுவுவதாக அமைத்துள்ளதால் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாக உள்ளது என்ற குற்றச்சாட்டை எழுந்தது. எனவே இதற்கு எதிராக பிரபல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா உள்ளிட்டோர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

மனுக்கள் மீது இன்று நடந்த விசாரணையில், இந்தத் திருத்தங்கள் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 79வது பிரிவின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டவை என்றும், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 14 [சமத்துவத்திற்கான உரிமை] மற்றும் பிரிவு 19 [பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம்], பிரிவு 19(1) (g) [சுதந்திரம் மற்றும் தொழில் உரிமை] ஆகியவற்றை மீறும் வகையிலும், 'போலியான' மற்றும் 'தவறான' என்பதை இதன்மூலம் நிர்ணயிக்க முடியும் என்பது பற்றிய தெளிவான விளக்கம் இல்லாததாகவும் உள்ளது என்று தெரிவித்த மும்பை உயர்நீதிமன்றம் மத்திய அரசு அமைத்த தகவல் சரி பார்ப்பு செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது.

Tags:    

Similar News