லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த விவகாரம் - திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்
- திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷ்யாமளா ராவ் விளக்கமளித்துள்ளார்.
- குஜராத்திற்கு ஆய்விற்காக அனுப்பப்பட்ட நெய்யில் 20 சதவீதம் மட்டுமே தரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான இந்துக்கள் வருகை தரும் திருப்பதி வேகடாச்சலபதி கோவிலில் லட்டுக்கள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆந்திராவில் கடந்த ஜகன்மோகன் ஆட்சியின் போது திருப்பதி லட்டு தயாரிப்பில் மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த நெய்யைப் பயன்படுத்தியதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் லட்டுவில் மீன் எண்ணெய், மாட்டு கொழுப்பு, சோயா பீன், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட கொழுப்புகளும் இருந்ததாகத் தெரியவந்தது.இந்து மதத்தின் மாடு புனிதமான விலங்காகக் கருதப்படும் நிலையில் கடந்த காலங்களில் மாட்டிறைச்சி கொழுப்பை பிரசாதமாக தாங்கள் சாப்பிட்டுள்ளோம் என்பது பக்தர்களை அசவுகரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அரசியல் ரீதியாகவும் இந்த விவகாரம் புயலைக் கிளப்பியுள்ள நிலையில் இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷ்யாமளா ராவ் விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டுவின் தரம் குறைந்துவிட்டது. ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் இருந்து ஜூன், ஜூலை மாதம் 4 டேங்கரில் வந்த நெய்யில் தயாரிக்கப்பட்ட லட்டின் தரம் குறைந்ததாக புகார்கள் வந்தது. இது குறித்து ஆந்திர அரசிடம் தெரிவித்தோம். நெய் மாதிரிகளை தேவஸ்தான ஆய்வகத்தை தவிர்த்து வேறு ஆய்வகத்திற்கு அனுப்பினோம். குஜராத்திற்கு ஆய்விற்காக அனுப்பப்பட்ட நெய்யில் 20 சதவீதம் மட்டுமே தரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சோயா பீன்ஸில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்யில் கலப்படம் நடந்துள்ளது. இது தொடர்பாக நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. நிபுணர்களின் ஆலோசனைப்படி வேறு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். தரமற்ற நெய் விநியோகம் செய்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. எதிர்காலத்தில் இதுபோன்று நடக்கக்கூடாது என்பதே எங்களது விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.