தமிழக அரசு காவல் துறையை இஷ்டத்துக்கு பயன்படுத்துகிறது - தினகரன் குற்றச்சாட்டு
ஆலந்தூர்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது கண்டு கொள்ளாத அரசு துப்பாக்கிசூடு நடத்தி 13 பேரை படுகொலை செய்தது. மக்களை பற்றி இந்த அரசுக்கு கவலை இல்லை.
படுகொலை நடந்த பிறகு அரசாணை போட்டு ஆலையை மூடுவோம் என்றனர். பின்னர் நிரந்தரமாக மூடுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
அதேபோல் தான் சேலத்தில் 8 வழி பசுமை சாலையை அமைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அங்கிருக்கும் மக்கள் விவசாய நிலம் பாதிக்கப்படுகிறது. பசுமை வழிச் சாலை வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
சென்னை - பெங்களூர் சாலையில் அதிக போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை 8 வழிச் சாலையாக அரசு மாற்றினால் பரவாயில்லை. அதைவிட்டுவிட்டு போக்குவரத்தே இல்லாத சேலத்தில் சாலை அமைக்கிறார்கள்.
மற்றொரு தூத்துக்குடி போல சேலம் மாற வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறாரா? அவர் நினைப்பது நடக்காது. அதற்குள் இந்த அரசாங்கத்துக்கு முடிவு வரும்.
சட்டசபையில் டாஸ்மாக் பற்றி நான் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில் கொடுக்கிறார். அதற்கு விளக்கம் தர நான் எழுந்த போது அவர் உங்களையும் பற்றி சொல்லவில்லை என்று சபாநாயகர் சொன்னதால் நான் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தேன்.
பின்பு சபாநாயகருக்கு கடிதம் எழுதினேன். அதில் உறுப்பினர் உரிமையை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும். பேசுவதற்கு வாய்ப்பு தர வேண்டும் என்று கூறி இருந்தேன். சட்டசபையில் எதிர்க்கட்சியினர் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை என்று முதல்-அமைச்சரிடம் தான் கேட்க வேண்டும். மத்திய அரசின் ஆதரவு இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று மாநில அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது.
காவல் துறையை தங்கள் இஷ்டத்துக்கு அரசு பயன் படுத்தி வருகிறது. அரசை கண்டு காவல்துறை பயப்படுகிறது. மக்கள் இதை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #Thoothukudishooting