மார்ச் 2026-க்குள் நாட்டிலிருந்து நக்சலிசம் முற்றிலும் அழிக்கப்படும்: அமித்ஷா ஆவேசம்
- ஜார்க்கண்டில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
- ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டார்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன.
ராஞ்சியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய உள்துறை மந்திரி அமித் ஷா, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், சதாரா மாவட்டத்தின் சிமாரியா பகுதியில் நடைபெற்ற பேரணியில் அமித்ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளில் பாஜக கூட்டணி 52 இடங்களில் வெற்றி பெறும்.
அற்ப அரசியல் ஆதாயங்களுக்காக நக்சலிசத்தை தூண்டிவிடுகின்றனர்.
ஜார்க்கண்டில் இருந்து தலித், பழங்குடியினர், ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான ஹேமந்த் சோரன் அரசை அகற்ற வேண்டிய நேரம் இது.
கடந்த 5 ஆண்டுகளில் ஜார்க்கண்டில் இருந்து அச்சுறுத்தலை நாங்கள் அகற்றிவிட்டோம்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மார்ச் 2026க்குள் இந்தியாவில் இருந்து நக்சலிசத்தை முற்றிலுமாக அழித்துவிடும் என ஆவேசமாக தெரிவித்தார்.