செய்திகள்

கவர்னரின் சிறை தண்டனை எச்சரிக்கை மிரட்டும் தொனியில் இருக்கிறது - தினகரன்

Published On 2018-06-25 07:10 GMT   |   Update On 2018-06-25 08:11 GMT
கவர்னரின் சிறை தண்டனை எச்சரிக்கை மிரட்டும் தொனியில் இருக்கிறது என்று டி.டி. வி.தினகரன் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #TTVDhinakaran #GovernorBanwarilal

கரூர்:

கரூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி. வி.தினகரன் இன்று கரூர் வந்தார்.

இதையடுத்து தான் தோன்றிமலை பகுதியில் கட்சி கொடியேற்றி வைத்த அவர், திறந்த வேனில் நின்றவாறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட அவைத்தலைவர் லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் டி.டி.வி.தினகரன் நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிரூபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

கே: கவர்னரின் ஆய்வு பணியை தடுத்தால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என கவர்னர் மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளதே?

ப: இது ஜனநாயக நாடா? அல்லது அதிபர் ஆட்சி நடைபெறும் பாகிஸ்தானா? என்று தெரியவில்லை. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. இந்த ஆட்சி நமக்கு பிடிக்கிறதோ, இல்லையோ? குற்றம் சாட்டப்பட்ட கவர்னர் சுற்றுப்பயணம், ஆய்வு மேற்கொள்வது தவறு. இதனை கண்டிக்கிறோம்.

கவர்னர் மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை இல்லை. தமிழகத்தில் எத்தனையோ கவர்னர்கள் இருந்துள்ளனர். அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

 


தற்போது கவர்னரின் சுற்றுப்பயணம்-ஆய்வை கண்டித்து ஜனநாயக முறையில் ஒரு அரசியல் கட்சி கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்துகிறது. இதற்காக வழக்கு தொடர்வோம் என்று சொல்லலாம். அதைவிட்டு விட்டு விட்டு 7 வருடம் சிறை தண்டனை அளிப்போம் என்று கூறுவது மிரட்டும் தொனியில் உள்ளது.

கே: சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் விளக்க வேண்டும். சேலம், முதல்வரின் சொந்த மாவட்டம். எனவே அவரே நேரிடையாக மக்களை சந்தித்து விளக்கலாம்.

கே: கவர்னரை கண்டித்து போராட்டம் நடத்துவீர்களா?

ப: என்னை பொறுத்த வரை மக்கள் பிரச்சினைகள், மக்கள் விரும்பாத திட்டங்களை எதிர்த்து போராடுவதைத்தான் விரும்புகிறேன். கவர்னர் விவகாரத்தை பெரிதுப்படுத்த விரும்பவில்லை.

கே: இயக்குனர் கவுதமன் கைது பற்றி?

ப: தமிழகத்தில் அரசை எதிர்த்து போராடுபவர்கள் மீது அடக்குமுறை கையாளப்படுகிறது. தமிழகத்தில் நடப்பது ஆட்சியே கிடையாது.அடக்குமுறை ஆட்சிதான் நடக்கிறது.

கே : கமல் உள்ளிட்டவர்கள் தேர்தல் கூட்டணி நோக்கி அரசியல் பயணம் மேற் கொண்டிருக்கிறார்களே?

ப: தேர்தல் வரும் போது தக்க நேரத்தில் முடிவு செய்வோம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் தான் தேர்தல் கூட்டணி வைக்கப்படும்.

கே: தூத்துக்குடி சம்பவ விசாரணை குறித்து உங்கள் கருத்து என்ன?

ப:தூத்துக்குடி சம்பவம் குறித்து முதல்வரின் கீழ் உள்ள சி.பி.சி.ஐ.டி. விசாரணையால் எந்த உண்மையும் வெளிவராது. எனவே சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #GovernorBanwarilal

Tags:    

Similar News