கதம்பம்
தமிழக அரசு சின்னம்

தமிழக அரசு சின்னம் உருவான கதை

Published On 2022-01-28 15:44 GMT   |   Update On 2022-01-28 15:44 GMT
எந்த கோயில் கோபுரங்களாவது தமிழக கோயில் கோபுரங்களைப் போல் உள்ளதா? இருக்கின்றதா? என ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அளித்த பதிலை நேரு ஏற்றுக்கொண்டார்.
நேரு ஆட்சியில்  இருந்தபோது  மாநிலங்களுக்கானத் தனி முத்திரைகளை முடிவு செய்வது குறித்து, அந்தந்த மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதுகின்றார்.

தமிழகத்தில் அப்போது ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்  முதல்வராக இருந்தார். அவர் தமிழகத்தின் தனி முத்திரைக் குறித்து அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை- ஆய்வு நடத்தினார்.

கடைசியாக, திருவில்லிப்புத்தூரின் கோயில் கோபுரத்தையே ‘தமிழகத்தின் தனி முத்திரை’ சின்னம் என்று தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.

அதைக்கண்ட நேருக்கு அதிருப்தி. “என்ன இது, நாம் மதசார்பற்ற ஜனநாயக நாடென்று இருக்கின்றோம், நீங்கள் இப்படி ஒரு இந்து கோயில் கோபுரத்தை ‘மாநில சின்னமாக’ அனுப்பி வைத்துள்ளீர்கள். இது சரியா? என்று கேட்கின்றார்.

அதாவது, எல்லா மதத்தவரும் உள்ள நாட்டில்- மாநிலத்தில் தனிப்பட்ட ஒரு மதத்தினருக்கான இந்து ‘கோயில் கோபுரத்தை’ சின்னமாக எப்படி அறிவிக்கலாம் என்பது நேருவின் அதிருப்தி கேள்வி.

பதிலளித்த ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், “நான் தேர்வு செய்தது இந்து மதத்தின் கோயில் என்ற அடிப்படையில் அல்ல. அந்த கோயில் கோபுரம் இந்து மதத்திற்கானதும் அல்ல.

தமிழகத்தைத் தாண்டி மற்ற எல்லா மாநிலங்களிலும்தான் இந்து மதம் உள்ளது. இந்து கோயில்கள் உள்ளன. எந்த கோயில் கோபுரங்களாவது தமிழக கோயில் கோபுரங்களைப் போல் உள்ளதா? இருக்கின்றதா? அப்படியே இருந்தாலும்  அது தமிழர்கள் கட்டிய கோயிலாகத்தான் இருக்கும்.

இந்த மாதிரியான கோயில் கோபுரங்கள்  தமிழர்களின் கலைப் பண்பாட்டு வடிவங்கள். தமிழர்களின் கட்டிடக்கலை. இப்படியானது வேறு எந்த நாட்டிலும்- மாநிலங்களிலும் இல்லை.

அதனாலேயே நான் கோயில் கோபுரங்களைத் தனிச்சின்னமாக, தமிழர்களின் அடையாளமாக, தமிழகத்தின் முத்திரையாகத் தேர்வு செய்தேன்” என்று விளக்கமளித்தார்.

பிரதமர் நேருக்கு உண்மை தெளிந்தது. கோயில் கோபுரத்தையே தமிழகத்தின் ‘தனிச் சின்னமாக’ ஏற்றுக்கொண்டு அறிவித்தார் என்கிறார் பத்திரிகையாளர் பா.ஏகலைவன்- தொகுப்பு கோ.வசந்தராஜ்

Similar News