- பிறந்த குழந்தைக்குப் பேசத்தெரியாது.
- பிறந்த குழந்தையின் முதல் ஒலி அழுகையே.
அம்மா என்ற சொல்லை எவரும் கண்டுபிடிக்கவில்லை. அது இயற்கையாக குழந்தை கண்டுபிடித்த சொல்லாகும். அது தாயை நோக்கி கூவியதால், தாய் அம்மாவானாள்.
பிறந்த குழந்தைக்குப் பேசத்தெரியாது. இருந்தாலும் தனது தேவைகளை அழுகையின் மூலமே வெளிப்படுத்துகின்றது. பிறந்த குழந்தையின் முதல் ஒலி அழுகையே.
அழுவதற்காக வாயைத்திறந்தவுடன், 'அ' என்ற ஒலி வெளிப்படுகின்றது. அழுகையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப 'ஆ' என்றும் ஒலிக்கக் கேட்கலாம். ஏறக்குறைய அனைத்து உயிர் எழுத்துக்களின் ஒலிகளையும் குழந்தை அழுகையின் வாயிலாக ஒலிக்கின்றது.
அழும் குழந்தையின் திறந்த வாய் சிறது நேரத்திற்குள் மூடித்தான் ஆகவேண்டும். இரண்டு உதடுகளும் இணையும் போது 'ம்' என்ற ஒலி இயற்கையாகப் பிறக்கின்றது. இவ்வாறு தொடர்ந்து திறந்து மூடும்போது அ-ம் என்ற ஒலிகள் மாறி மாறி ஒலிக்கின்றன. அ-ம்-அ, அ-ம்-அ என்ற தொடர்ந்த ஒலியின் விளைவாக உருவான சொல்லே 'அம்ம-அம்மா' என்பதாகும். தாயும் தாயின் பாலும் தாயின் மார்பும் #அம்மு எனப்பட்டன.
அம்மாவிடமிருந்து பெறப்பட்ட உணவு அம்மு எனப்பட்டது. காலப்போக்கில் மம்மு என்றும் வழங்கியது. அம்முவுக்கு இணையான உணவை இன்றைய அறிவியல் கூட செயற்கையாகத் தோற்றுவிக்கவில்லை.
குழந்தையின் உடல் வளர்ச்சிக்கான ஊட்டம், செரிமானத் தன்மை, அனைத்திற்கும் மேலாக அம்மு உணவே குழந்தைக்கு மருந்தாக அமைந்து நோய்களைக் களைகிறது. எந்த உணவோடும் ஒப்புமை கூற இயலாத அம்மு, குழந்தையின் உடலை ஊதுகிறது. அதாவது வளர்ச்சியடையச் செய்கிறது. அம்மு+ஊது=அம்மூது எனப்பட்டது. அது அமுது என ஆனது. பிற்காலத்தில், அது அமிழ்து என்றும் சொல்லப்பட்டது.
உடலுக்கு ஊட்டம் தருவது அம்மு என்றால் அறிவுக்கு ஊட்டம் தருவது மொழியாகும். எனவே, மொழியும் அமிழ்து எனப்பட்டது.
அம்ம-அம்மு-அமுது-அமிழ்து என விரிந்த சொற்கள், அக்குழந்தை பேசிய மொழிக்கும் ஏற்றி சொல்லப்பட்டு அது தமிழ் எனப் பிறப்பெடுத்தது.
அம்முவுக்கு இணையான ஓருணவு இல்லை என்பது போல் தமிழுக்கும் இணையான ஒரு மொழி இல்லை என்பது அதன் உட்கருத்து. அதனால்தான், பாரதிதாசனார், "தமிழுக்கும் அமுதென்று பேர்!" எனப் பாடினார். தமிழ் இயற்கையில் பிறந்த மொழி என்பதை அச்சொல் வரலாறு விளக்குகின்றது.
- ம.சோ.விக்டர்