அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த துப்புரவு மேற்பார்வையாளர் பணி இடைநீக்கம்
- செயல் அலுவலர் சுப்பிரமணிய–னுக்கும் துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
- வாக்குவாதத்தை தொடர்ந்து துப்புரவு மேற்பார்வையாளர், செயல் அலுவலரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் சுப்பிரமணியன். இவர் கடந்த 2 மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். அப்போது பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆய்வில் துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேஷ் உட்பட 3 பேருக்கு மெமோ கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து செயல் அலுவலர் சுப்பிரமணிய–னுக்கும் துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தை தொடர்ந்து துப்புரவு மேற்பார்வையாளர், செயல் அலுவலரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து செயல் அலுவலர் சுப்பிரமணியன் பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் செயல் அலுவலர் சுப்பிரமணியன் இதுதொடர்பாக சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனருக்கு புகார் அளித்ததின் பேரில், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேஷை, தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் பரமத்தி வேலூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.