நிலக்கோட்டை பகுதியில் 100 நாள் வேலை திட்ட நேரத்தை குறைக்க வேண்டும் - பயனாளிகள் வலியுறுத்தல்
- 100 நாள் வேலை திட்ட நேரத்தை காலை 10 மணி மாலை 4 மணி வரை மாற்ற வேண்டும் என பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- தமிழக முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு பணி நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிலக்கோட்டை:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 100 நாள் வேலை வாய்ப்பை பொது மக்களுக்கு வழங்குவதால் அடிப்படைத் தேவை களுக்கு உதவியாக இருக் கும் என மத்திய மாநில அரசுகள் தெரிவிக்கின்றன.
இருந்தபோதும் 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை நேரமாகும். இதனால் காலை நேரத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வேலைக்கு வர தாமதமாகிறது. மேலும் மாலை 5 மணிக்கு வேலை முடிந்தால் வீட்டுக்கு செல்ல 7 மணி ஆகி விடுகிறது.
அதன் பின்னர் வீடுகளுக்கு உணவு சமைத்து குழந்தைகளுக்கு வழங்குவது என்பது மிகவும் கடினமாக உள்ளது. எனவே 100 நாள வேலை திட்ட நேரத்தை காலை 10 மணி மாலை 4 மணி வரை மாற்ற வேண்டும் என பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வந்த நாடாளுமன்ற குழுவினரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு பணி நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.