பொன்னேரி நகராட்சி பகுதியில் சுற்றிய 100 நாய்கள் பிடிக்கப்பட்டது
- தெரு நாய்கள் கடந்த 6 மாதத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறின.
- கடந்த 4 நாட்களில் தெருவில் சுற்றித் திரிந்த சுமார் 100க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து உள்ளனர்.
பொன்னேரி:
பொன்னேரி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள தெருக்களில் நாய்கள் அதிகரித்து வந்தது. அவை பொது மக்களுக்கு அச்சுறுத்தலாகவும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் தொல்லை ஏற்படுத்தி வந்தன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர்.
மேலும் தெரு நாய்கள் கடந்த 6 மாதத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறின. இதைத்தொ டர்ந்து தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பொது மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த நாய்களை பிடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 4 நாட்களில் தெருவில் சுற்றித் திரிந்த சுமார் 100க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து உள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் கோபிநாத் கூறும்போது, பிடிக்கப்பட்ட நாய்களுக்கு கருத்தடை நடைபெறுகிறது. இதுவரை 14 வார்டுகளில் நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. கருத்தடை செய்த நாய்கள் பாதுகாப்புடன் பிடித்த இடத்தில் கொண்டு சென்று விடப்படும். மீதமுள்ள 13 வார்டுகளில் நாய்கள் பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று மட்டும் 26 நாய்களுக்கு கருத்தடை ஊசி செலுத்தப்பட்டது என்றார்.