சேலம் மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாதந்தோறும் 100 சுகப்பிரசவங்கள்
- சேலம் மாநகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாதந்தோறும் சராசரியாக 60 முதல் 70 சுகப்பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன.
- முதல் முறையாக நடப்பாண்டில் தொடர்ந்து, கடந்த 5 மாதங்களாக, மாதந்தோறும் 100- க்கும் மேற்பட்ட சுகப்பிர சவங்கள் நடைபெற்று உள்ளன.
அன்னதானப்பட்டி:
சேலம் மாநகராட்சி பகுதிகளில் 16 நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வரும் கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாநகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாதந்தோறும் சராசரியாக 60 முதல் 70 சுகப்பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. முதல் முறையாக நடப்பாண்டில் தொடர்ந்து, கடந்த 5 மாதங்களாக, மாதந்தோறும் 100- க்கும் மேற்பட்ட சுகப்பிர சவங்கள் நடைபெற்று உள்ளன.
இதில் குறிப்பாக தாத காப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து அதிகளவில் சுகப்பிரசவங்கள் நடை பெற்று, மாநில அளவில் அந்த மருத்துவமனை தொடர்ந்து முன்னணியில் உள்ளது. மேலும் அனைத்து சுகாதார நிலையங்களிலும் கர்ப்பிணிகளுக்கு, கர்ப்பம் குறித்து சந்தேகங்கள் மற்றும் விளக்கம், யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
கருவுற்ற பெண்ணிற்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், நீரிழிவு , வலிப்பு நோய், ஆஸ்துமா, இதயப் பிரச்சினைகள், தைராய்டு, ரத்தம், நரம்பு கோளாறுகள் உள்ளிட்டவற்றை கண்டறிய ரத்த பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
அரசின் மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ், ரூ.18,000 வரை பணம், தாய், சேய் நல பெட்டகம் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் பெட்டகம் ஆகியன வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கர்ப்பிணிகள் நாளுக்கு நாள் ஆர்வத்துடன் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிசோதனைக்காக வந்து கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு கர்ப்பி ணிக்கும் தனிக்கவனம் செலுத்தி, ஆரம்பம் முதல் தொடர்ந்து கண்கா ணித்து வருவதால், பிரசவ
காலத்தில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் உடனுக்குடன் கண்டறி யப்பட்டு, அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக அறுவை சிகிச்சைகள் தவிர்க்கப்பட்டு, அதிக எண்ணிக்கையிலான சுகப்பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. சேலம் மாநகரில் கடந்த ஜூலை மாதத்தில் 104, ஆகஸ்ட் மாதத்தில் 138, செப்டம்பரில் 118, அக்டோபர் மாதத்தில் 114, நவம்பரில் 103 என மொத்தம் 577 சுகப்பிரசவங்கள் நடந்துள்ளன".
இவ்வாறு அவர்கள் கூறினர்.